புத்தாதான், நவம்பர்.07-
சபா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு தொகுதியிலும் பாரிசான் நேஷனலுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையில் மோதல் இருக்காது என்று பாரிசான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் உறுதிப்படுத்தினார்.
போட்டியிடும் தொகுதிகள் குறித்து பாரிசான் நேஷனல் இன்னமும் விவாதித்துக் கொண்டு இருந்த போதிலும் மடானி அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் என்ற முறையில் பாரிசான் நேஷனலும், பக்காத்தான் ஹராப்பானும் எந்தவொரு தொகுதியிலும் நேரடிப் போட்டியை எதிர்கொள்ளும் நிலை இருக்காது என்று அம்னோ துணைத் தலைவருமான முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை உறுதிச் செய்யும் வகையில் வாக்களிப்பு தினம் வரை பாரிசான் நேஷனல் தேர்தல் கேந்திரம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
சபா சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேளையில் வேட்புமனுத் தாக்கல் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.








