நவ. 27-
தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டு வழக்கை கிளந்தான், குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு கோத்தா பாரு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அண்மையில் நடைபெற்ற கிளந்தான், Nenggeri சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது நிந்தனைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக முகைதீனுக்கு எதிராக
கொண்டு வரப்பட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டு வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு அனுமதி அளிப்பதாக நீதிபதி டத்தோ அஸ்மி அப்துல்லா தனது தீரப்பில் கூறினார்.
சிக்கலான சட்ட அம்சங்கள், விசாரணையின் போது எழக்கூடும் என
எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்பாராத சவால்கள் காத்திருக்கும் பட்சத்தில் குறிப்பாக 1948ஆம் ஆண்டு தேச
நிந்தனைச் சட்டத்தின் சில பிரிவுகளில் காணப்படும் அரசியலமைப்பு விவகாரங்களுக்கு தெளிவு காண வேண்டியிருப்பதாக முகைதீன் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.








