மலாக்கா மாநிலத் தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் இன்று சிறப்புக் கூட்டத்தை நடத்துகிறது.
ஜாலான் பெண்டாஹாராவில் உள்ள தங்கும்விடுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தலைமை வகிக்கிறார்.
இக்கூட்டத்திற்குப் பிறகு மலாக்கா தேர்தலுக்கான தேர்தல் உத்தரவு வெளியிடப்படும் தேதி, வேட்புமனு தாக்கல் தேதி, முன்கூட்டிய வாக்குப்பதிவு தேதி, வாக்குப்பதிவு நாள் மற்றும் பிரசார காலம் உள்ளிட்ட முக்கிய தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
மேலும், தேர்தலுக்கான பிற ஏற்பாடுகள் குறித்த தகவல்களும் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடப்பட்ட 28 இடங்களில் பாரிசான் நேஷனல் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநில அரசை அமைத்தது.
பக்காத்தான் ஹராப்பான் 5 இடங்களிலும், பெரிகாத்தான் நேஷனல் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கடந்த செப்டம்பர் 22 -ஆம் தேதி மலாக்கா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அப் ரவூஃப் யுசோ, மலாக்கா சட்டமன்றம் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதன் மூலம் 16ஆவது மாநிலத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.








