கோலாலம்பூர், அக்டோபர் 29.-
மலேசியாவின் தலைமையிலான 2025 ஆசியான் உச்சநிலை மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது! இதன் நிறைவாக, மலேசிய அரசாங்கத்தின் சார்பில், ஐ.நா. வதிவிடத் தலைவரும், வீடமைப்பு, ஊராட்சி அமைச்சருமான, மாண்புமிகு ஙா கோர் மிங், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், லாவோஸ் பிரதமர் சோனெக்ஸாய் சிபாண்டோன் ஆகியோருக்கு விமான நிலையத்தில் பிரியாவிடை அளித்தார்.

ஆசியான் உச்சநிலை மாநாடு முழுவதும் இவ்விரு தலைவர்களுக்கும் பொறுப்பு அமைச்சராக (Minister-in-Attendance) பணியாற்றிய ஙா கோர் மிங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் நடந்த பிரியாவிடை விழாவில், அவர்களின் பங்களிப்புக்கு மலேசியாவின் ஆழமான நன்றியைத் தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும், அவர்களின் துணைவியார்களுக்கும் அவர் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இரு நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மலேசியா உறுதியாக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.
ஒருமைப்பாட்டையும், எதிர்காலத்தையும் உறுதி செய்த முக்கிய முடிவுகள்!
இந்த உச்சநிலை மாநாடு, ஆசியான் வட்டாரத்தின் ஒற்றுமையையும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் உறுதிப்படுத்திய ஒரு வரலாற்றுத் தருணம் என்று அமைச்சர் ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.

இந்த உச்சநிலை மாநாட்டின் மூலம் பல முக்கிய மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன:
* கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தம் : வட்டார நிலையிலான மோதல்களைத் தீர்ப்பதில் ஆசியானின் மத்தியப் பங்கை உறுதிப்படுத்தும் முக்கிய ஒப்பந்தம்.
* கிழக்குத் திமோர்- இணைவு: 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியான் வட்டாரத்தின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் விதமாக, கிழக்குத் திமோர் புதிய உறுப்பினராக இணைந்தது.
* அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் : ஆசியான் நாடுகளில் முதன்முறையாக, மலேசியா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரித்து, புர்சா மலேசியாவிலும் ரிங்கிட்டிலும் சாதகமான இயக்கத்தைக் கொண்டு வந்துள்ளது.
* உலகளாவிய அங்கீகாரம்: அமெரிக்கா, சீனா, ஐ.நா. பொதுச்செயலாளர், பிரிக்ஸ் (BRICS), ஜி20 (G20), ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகத் தலைவர்களின் பங்கேற்பு, உலக அரங்கில் மலேசியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது.
* ஃபிஃபா ஆசியான் கோப்பை அறிமுகம் (FIFA ASEAN Cup): விளையாட்டு, வட்டார நிலையிலான ஒற்றுமை, சுற்றுலாத் திறனை மேம்படுத்தும் புதிய முயற்சி.
பொதுச் சேவைத் துறையின் வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம்!
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையின் கீழ், மலேசியாவின் பொதுச் சேவைத் துறையின் உலகத் தரம் வாய்ந்த தொழில் திறனையும், திறமையையும் இந்த உச்சநிலை மாநாடு நிரூபித்துள்ளதாக ஙா கோர் மிங் பெருமிதம் கொண்டார்.

"சரியான வழிகாட்டி, தலைமையும் கிடைக்கும்போது, மலேசியாவால் உயரிய அனைத்துலகத் தரத்தில் செயல்பட முடியும் என்பதை நம் பொதுச் சேவை ஊழியர்கள் நிரூபித்துள்ளனர்," என்று அவர் கூறினார். மேலும், இந்தச் சாதனை, "மடானி அரசாங்கமும் மக்களும் கைகோர்த்துச் செயல்பட்டால், நம் தேசத்தால் எதை அடைய முடியும் என்பதற்கு இஃது ஒரு சான்று" என்றும் அவர் நிறைவு செய்தார்.








