கோலாலம்பூர், அக்டோபர்.27-
காஸாவில் நடந்த அட்டூழியங்கள் உட்பட உலகளாவிய நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் ஐ.நா.வின் தார்மீகத் தெளிவு மற்றும் நிலைப்பாடு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெகுவாகப் பாராட்டினார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று திங்கட்கிழமை பேசிய டத்தோ ஶ்ரீ அன்வார், பன்முகத்தன்மை, சுதந்திரம் மற்றும் நாடுகள் அடிப்படையில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதில் ஐ.நா.வின் நிலைப்பாட்டையும், உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் மலேசியா பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
காஸாவில் நடந்தது வரும் அட்டூழியங்கள் போன்ற உலகின் தீர்க்க முடியாத நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் கூட, ஐ.நா.வின் உறுதியும், தெளிவும் தம்மை பிரமிக்க வைப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஐ.நாவின் நிலைப்பாடானது, மனித நேயத்தின் குரலாக இருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தமது உரையில் வர்ணித்தார்.








