பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளின் தற்காலிக அரசியல் கூட்டணி கொள்கையற்றது என்றும், பேராசை மற்றும் துரோகம் காரணமாக இது மீண்டும் தோல்வியிலேயே முடியும் என்றும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடுமையாகச் சாடியுள்ளார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அமிருடின் ஷாரி, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1972, 2008 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட இது போன்ற அரசியல் முயற்சிகள் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டினார்.
1972 அம் ஆண்டில் பாரிசான் நேஷனல் ஓர் உறுப்புக்கட்சியாக பாஸ் சேர்ந்தது. 2008 ஆம் ஆண்டில் பாரிசான் நேஷனல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது. 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலேசிய அரசியல் வரலாற்றியேயே முதல் முறையாக பாரிசான் நேஷனல் படுதோல்வி அடைந்து, தனது ஆட்சியை இழந்தது என்று அமிருடின் ஷாரி வரலாற்றுக்குறிப்புகளை சுட்டிக்காட்டினார்
அவர்களின் 'உம்மா ஒற்றுமை' என்ற முழக்கம் வெறும் அரசியல் தந்திரம் மட்டுமே என்றும், பாஸ் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் முழுமையாக ஆட்சி செய்யும் திரெங்கானு, கிளாந்தான், கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை அது தீர்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால்தான் அம்மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு தேடி சிலாங்கூர், பினாங்கு போன்ற பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றனர் என்றும் அமிருடின் ஷாரி கூறினார்.
ருக்குன் நெகாரா கோட்பாட்டின் அடிப்படையிலான 'மக்களின் ஒற்றுமை' மற்றும் பக்காத்தான் ஹராப்பானின் நிர்வாகம் மட்டுமே மலேசியாவின் நிலையான வளர்ச்சிக்கும், மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலையொட்டி ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த தேர்தலில் அம்னோவும், பாஸ் கட்சியும் கைக்கோர்த்தது தொடர்பில் அமிருடின் ஷாரி இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.








