கோலாலம்பூர், டிச.14-
ஒற்றுமை அரசாங்க நிர்வாகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக மலாய்க்காரர்களின் உரிமைகள் எந்ததெந்த வகையில் பறிக்கப்பட்டு வருகிறது என்பதை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவும், பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த அவரின் சகாக்களும் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மலாய்க்காரர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் இந்நாட்டில் மலாய்க்காரர்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கலாம் என்று நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்துள்ள மகாதீரின் கூற்று, எந்த அளவிற்கு உண்மை என்பதை ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவர் துல்லியமாக விவரிக்க வேண்டும் என்று அம்னோ மூத்த தலைவர் ஓத்மான் டேசா வலியுறுத்தியுள்ளார்.
மலாய்க்காரர்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், தங்கள் முன் தோன்றியுள்ள ஒரு பொது எதிரியை எதிர்கொள்ளவும், மலாய்க்காரர்களின் நலனை முன்னெடுக்கவும், /பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் அவரின் சகாக்களுடன் தாம் ஒன்றிணைவதாக துன் மகாதீர் அறிவித்தார்.
துன் மகாதீர், யாருடன் இணைகிறார், இணையக்கூடாது என்பது அவரின் பிரச்னையாகும். ஆனால், மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறியுள்ள துன் மகாதீர், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிரூபிக்க வேண்டும் என்று ஓத்மான் டேசா கேட்டுக்கொண்டார்.








