ஜொஹன்னஸ்பெர்க், நவம்பர்.22
ஆப்பிரிக்க கண்டம் குறித்த ஆழமான புரிதலையும், ஈடுபாட்டையும் வளர்க்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இதற்காக 'ஆப்பிரிக்க ஆய்வு மையம்' ஒன்றை மலேசியா நிறுவவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மிகப் பெரிய கண்டமான ஆப்பிரிக்காவிலுள்ள 54 நாடுகளும் தனித்தன்மை வாய்ந்தவை என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1980-களிலும் 1990-களிலும் ஆப்பிரிக்க நாடுகளுடனான மலேசியாவின் தொடர்பு, வலுவாக இருந்ததைச் சுட்டிக் காட்டிய அன்வார், மீண்டும் ஆப்பிரிக்காவுடனான தொடர்பை வலுப்படுத்த மலேசியா முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு மையமானது நிறுவப்படுவதன் மூலம் ஆப்பிரிக்காவைப் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படுவதோடு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளும் உருவாகும் என தாம் நம்புவதாக நேற்று ஜொஹன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இது போன்ற ஆய்வு மையங்கள் மலேசியாவிற்குப் புதிதல்ல என்று குறிப்பிட்டுள்ள அன்வார், மலாயாப் பல்கலைக்கழகத்திலும், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும், இஸ்லாம் மற்றும் ஆசியாவைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.








