கோலாலம்பூர், ஜூலை.19-
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16-வது தேர்தலை முன்னிட்டு, ஆளும் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையை நாளை ஜூலை 20-ஆம் தேதி இரவு வெளியிடவுள்ளது.
இது குறித்து நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் செயல்பாட்டு இயக்குநர் Datuk Muhammad Zaki Md Sabri கூறுகையில், 2018-ஆம் ஆண்டு மாநில அரசை கைப்பற்றிய பின்னர் மக்கள் பயனடைந்து வரும் நலத்திட்டங்களையும், மேம்பாடுகளையும் தொடர்ந்து நிலைநிறுத்துவதே தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், பக்காத்தான் ஹராப்பான் உயர்மட்ட தலைமைத்துவத்தால் இந்த தேர்தல் அறிக்கை விரிவாக தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலத்தின் வெற்றிகளையும் முன்னேற்றங்களையும் தொடர்ந்து கொண்டு செல்லும் வாக்குறுதிகளுக்கு இந்த அறிக்கை முக்கியத்துவம் அளிக்கும் என்றும் Muhammad Zaki உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தின் இரண்டாவது நாளில் பக்காத்தான் தேர்தல் இயந்திர நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், வேட்பாளர்களுக்கு மக்களிடம் இருந்து சாதகமான ஆதரவு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அனைத்து கட்சிகளும் ஆரோக்கியமான முறையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், சமயம், அரச குடும்பம் மற்றும் இனம் உள்ளிட்ட 3R தொடர்பான உணர்வுபூர்வமான விவகாரங்களைத் தவிர்த்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி கலைக்கப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குப்பதிவானது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 28-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் மொத்தம் 8 லட்சத்து 89 ஆயிரத்து 490 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








