பினாங்கு, டிச.14-
பினாங்கை சேர்ந்த வசதி குறைந்த இரண்டு இந்திய மாணவிகள் ஏய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசமாக பயில்வதற்கு தலா 98 ஆயிரம் ரிங்கிட் மற்றும் 21 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள உபகாரச் சம்பளத்தை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வழங்கியுள்ளதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர் இன்று அறிவித்தார்.
பினாங்கில் குமரன் கிருஷ்ணனை சட்டமன்ற உறுப்பினராக கொண்டுள்ள பகான் டாலம் தொகுதியைச் சேர்ந்த மாணவி ரோஷினி பிரபாகரன், 4 ஆண்டுகளுக்கு Biomedical Science துறையில் பயில்வதற்கு 98 ஆயிரத்து 100 ரிங்கிட்டும், மாணவி கெஷிகா ராமன், வர்த்தக நிர்வாகத்தில் டிப்ளோமா பயில்வதற்கு 21 ஆயிரத்து 600 வெள்ளியையும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கியிருப்பதாக ராயர் குறிப்பிட்டார்.

இரு மாணவிகளும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வழங்கிய உபகாரச் சம்பளத்திற்கான உறுதிக்கடிதத்தை ராயர் இன்று பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் வழங்கினார்.
இந்நிகழ்வில் பினாங்கு இந்து அறப்பணிவாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் ஆணையர்களான குமரன் கிருஷ்ணன், டத்தோ ஜே.தினகரன், பார்த்திபன் மற்றும் மாணவி ரோஷினியின் தாத்தா கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவிகளின் விவகாரத்தை சட்டமன்ற உறுப்பினர் குமரன், இந்து அறப்பணி வாரியத்திற்கு கொண்டு வந்ததது மூலம் அறப்பணி வாரியத்தின் ஆணையரும், பினாங்கு மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவருமான டத்தோ தினகரன் மூலம் இவ்விவகாரம், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ராயர் குறிப்பிட்டார்.
இவ்விரு மாணவிகளும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் இலவசமாக தங்கள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு உபகாரச் சம்பளத்தை வழங்கிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் நன்றியை தெரவித்துக்கொள்வதாக ராயர் தமது நன்றி உரையில் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக இந்தியர்கள் ஒன்றுபட்டு இருந்தாலும், மாறுப்பட்டு இருந்தாலும் குறிப்பாக மஇகாவாக இருந்தாலும், DAP- யாக இருந்தாலும் அல்லது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் இந்திய சமுதாய மாணவர்களின் கல்வி என்று வரும் போது அவர்களுக்கு உதவுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோமானால் மாணவிகள் ரோஷினி, கெஷிகா போன்ற வசதி குறைந்த ஆற்றல் வாய்ந்த எண்ணற்ற இந்திய மாணவர்கள் உயர் கல்விக்கூடங்களில் வாசலை தொடுவதற்கு உறுதுணையாக இருக்க முடியும் என்று ராயர் தமது உரையில் தெரிவித்தார்.








