கோலாலம்பூர், நவம்பர்.16-
பிரதமர் அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையை மாற்றியமைக்கத் தயாரானால், வேறு அமைச்சின் பொறுப்புகளையும் ஏற்கத் தங்கள் கட்சி முழு மனதுடன் தயார் நிலையில் இருப்பதாக டிஏபி தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருப்பினும், அமைச்சரவையை மாற்றியமைக்கும் அதிகாரம் பிரதமரிடம் மட்டுமே உள்ளது என்றும், நாட்டின் நலனுக்காக அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் இலக்கவியல் அமைச்சரான கோபிந்த் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி, பதவிக் காலம் முடிவதற்கு முன்பே 16வது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், டிஏபி கட்சி அதற்கான சவால்களைச் சந்திக்கவும் களப் பணியாற்றவும் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக அவர் சூளுரைத்தார். வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பாம் வெற்றி பெறுவது, புத்ராஜெயா அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஒரு முக்கியச் சோதனையாக இருக்கும் என்றும் அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.








