கோலாலம்பூர், டிசம்பர்.13-
தாய்லாந்து - கம்போடியா மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நேற்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொலைப்பேசியில் கலந்துரையாடினார்.
டிரம்ப் உடனான இந்த தொலைபேசி உரையாடலில் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாகவும் அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தாய்லாந்து – கம்போடியா இடையிலான போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் மலேசியா, மீண்டும் அந்நாடுகளை இரு தரப்பு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு வரும்படி வலியுறுத்தியதாகவும் அன்வார் டிரம்பிடம் விளக்கமளித்துள்ளார்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்கும் ஆசியானின் கொள்கையின்படி, தொடர்ந்து போர் பதற்றத்தைத் தணிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் மலேசியா தொடர்ந்து உதவத் தயாராக உள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி, அன்வார் தலைமையில் கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து, கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
என்றாலும், அண்மையில் இரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் போர் ஏற்பட்டதால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.








