கோலாலம்பூர், ஜனவரி.19-
ஜனநாயக செயல் கட்சியான DAP- க்குள் 'பி டீம்' (Team B) இருப்பதாகக் கூறி, பின்னர் அந்த கருத்திலிருந்து பின் வாங்கிய அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் என்று மசீச துணைத் தலைவர் டான் தெய்க் செங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஸாஹிட் ஹமிடியின் இத்தகைய முரண்பாடான பேச்சுக்கள் பாரிசான் நேஷனலில் நீண்டகால அரசியல் நம்பகத்தன்மையை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று டான் தெய்க் செங் கூறியுள்ளார். ஒரு கூட்டணித் தலைவர் எதைப் பேசினாலும் சிந்தித்துப் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தனது தலைமைத்துவ பாணியை உடனடியாகத் திருத்திக் கொள்ளாவிட்டால், பாரிசான் நேஷனல் தொடர்ந்து மக்களின் ஆதரவை இழக்கும் என்று எச்சரித்த அவர், தற்போது பாரிசான் நேஷனலுக்கு ஸாஹிட் ஹமிடியே ஒரு பெரும் சுமையாக மாறி விட்டதாகக் குறிப்பிட்டார்.
ஸாஹிட் ஹமிடியின் செயல்கள் பாரிசான் நேஷனல் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக டான் தெய்க் செங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








