கோலாலம்பூர், நவம்பர்.27-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினுக்கு எதிராக வர்த்தகர் ஆல்பெர்ட் தே கூறியுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமர் விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பொருளாதார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான ரஃபிஸி ரம்லி கேட்டுக் கொண்டார்.
வர்த்தகர் ஆல்பெர்ட் தேயின் குற்றச்சாட்டுகளில் பிரதமருக்கு எதிராக சில விஷயங்களை பேசியிருக்கிறார். அந்த குற்றச்சாட்டுகளில் பொதிந்துள்ள உண்மைத் தன்மையை நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய இயலும். இதன் தொடர்பில் பிரதமர் விரைந்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பண்டான் எம்.பி.யான ரஃபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய சட்ட நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள தவறுவாரேயானால் அரசியல் வைரிகளான பாஸ் கட்சியும், பெரிக்காத்தான் நேஷனலும் இந்தக் குற்றச்சாட்டை, தங்களுக்கான அரசியல் மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
சபாவில் சுரங்க நடவடிக்கை ஊழல் தொடர்பில் ஒரு வர்த்தகரான ஆல்பெர்ட் தே என்பவரிடமிருந்து பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார், 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வர்த்தகர் ஆல்பெர்ட் தேவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஷாம்சுல் இஸ்கண்டார் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகி விட்டதாக நேற்று முன் தினம் அறிவித்து இருந்தார்.
வர்த்தகர் ஆல்பெர்ட் தே, கூறியுள்ள குற்றச்சாட்டு, நீதிமன்றத்தின் வாயிலாக மட்டுமே தீர்க்க முடியும். களங்கத்தைத் துடைக்க இயலும் என்று ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.
தற்போது பந்து, பிரதமரின் காலடியில் உள்ளது. இவ்விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது பிரதமரின் கைகளில் உள்ளது என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.








