கோலாலம்பூர், டிசம்பர்.01-
அமைச்சரவையில் விரைவில் சிறிய மாற்றம் நடைபெறவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோடி காட்டினார்.
அமைச்சரவையில் காலியாகவுள்ள சில பதவிகள் நிரப்பப்படும். பெரிய மாற்றங்கள் தேவையில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
அமைச்சரவை இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளது.
எனவே பெரிய மாற்றம் செய்ய வேண்டியில்லை என்று கோலாலம்பூரில் பெரோடுவா நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது, பிரதமர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
இந்த டிசம்பர் மாதத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று இதற்கு முன்பு ஊடகங்கள் ஆருடம் கூறியிருந்தன. தற்போது முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருக்கும் டத்தோ ஶ்ரீ தெங்கு ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ், பதவிக் காலம் நாளை டிசம்பர் 2 ஆம் தேதி முடிவடைகிறது.
செனட்டராக நியமிக்கப்பட்டு, அமைச்சரவைல் இடம் பெற்ற தெங்கு ஸாஃப்ருலின் இரண்டு தவணைக்கான செனட்டர் பதவிக் காலம், நாளை செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் ஆட்சியில் செனட்டராக நியமிக்கப்பட்டு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த தெங்கு ஸாஃப்ருல், பிரதமர் அன்வார் தலைமையிலான ஆட்சியில் மீண்டும் செனட்டராக நியமிக்கப்பட்டு, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பதவியை ஏற்றார்.
செனட்டராக நியமிக்கப்படக்கூடிய ஒருவரின் பதவிக் காலம் தலா மூன்று ஆண்டுகள் என்ற நிலையில் கூடியபட்சம் இரண்டு தவணைக் காலம் மட்டுமே பதவி வகிக்க முடியும்.








