கோல குபு பாரு, மே 30-
நடந்து முடிந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வாகனத்தில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகளுடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் படத்தை காட்சிக்கு வைத்து, அப்படத்தை தவறாக பயன்படுத்தியதாக முதியவர் P. இராமசாமி, மீண்டும் கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த மே 4 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் கோலகுபு பாரு, தாமான் புக்கிட் புங்கா-வில் தனது 4 Wheel Drive வாகனத்தில் 66 வயதான இராமசாமி இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட்டாக செயல்பட்ட நீதிபதி சித்தி பாத்திமா தாலிப் முன்னிலையில் நிறுத்தப்பட்ட பேரா, தஞ்சோங் ரம்புட்டான்- னைச் சேர்ந்த இராமசாமிக்கு எதிரான குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்ட போது, அந்த முதியவர், அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது கூடிய பட்சம் 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டம் 4 ஆவது பிரிவின் கீழ் இராமசாமி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இதே குற்றத்திற்காக கடந்த மே 6 ஆம் தேதி இராமசாமி கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட போது, தனது தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாத நிலையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதால் ஒரு மாத சிறைத் தண்டனையும், 3 ஆயிரம் வெள்ளி அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. .
உடனடியாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இராமசாமி, 17 நாட்கள் சிறையில் கழித்த நிலையில், கடந்த மே 23 ஆம் தேதி இவ்வழக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு சீராய்வுக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதித்துறை ஆணையர் டாக்டர் வெண்டி ஓய் சு, கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இராமசாமி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து,/ தண்டனையை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை விடுவிப்பதாக தீர்ப்பு அளித்தார்.
அத்துடன் அந்த முதியவர், மீண்டும் கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று நீதித்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டு மலாய்மொழியில் வாசிக்கப்பட்டதால் இராமசாமி அதனை புரிந்து கொள்ள முடியாமல் நிலையில் இருந்துள்ளார்.
தவிர, குற்றத்தை ஒப்புக்கொண்டால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை சட்டத்தின் தன்மையை அறியாமலேயே குற்றத்தை இராமசாமி ஒப்புக்கொண்டு இருப்பதால் இவ்வழக்கு மீண்டும் கோலகுபு பாரு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதித்துறை ஆணையர் டாக்டர் வெண்டி ஓய் சு உத்தரவிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று கோலகுபுபாரு நீதிமன்றத்தில் மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்ட இராமசாமி, தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதால் அவரை 4 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி பாத்திமா தாலிப் அனுமதி அளித்தார்.
இவ்வழக்கில் இராமசாமி சார்பில் வழக்கறிஞர் N. ராஜேஸ் ஆஜராகினார்.








