மலாக்கா மாநிலத்தில் மத்திய அரசாங்க உதவிகள் அனைத்தும் மக்களை நேரடியாக சென்றடைவதைக் காண முடிவதாக கெஅடிலான் கட்சியின் தொடர்புத்துறை துணை இயக்குநர் ஜோனதன் வேலா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எந்தவோர் உதவியும் மூன்றாம் தரப்பு தலையீடுன்றி மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அந்த வகையில் இந்த நேரடி உதவிகள், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பலனை தருகிறது என்று பிரதமரின் அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரியான ஜோனதன் வேலா குறிப்பிட்டார்.
மலாக்கா சட்டமன்றத் தேர்தலையெட்டி, அமைக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் மையத்தில் திசைகளுக்கு அளித்த பேட்டியில் ஜோனதன் வேலா இதனை வலியுறுத்தினார். மலாக்கா மாநில தேர்தலையொட்டி அடிதட்டு நிலைக்கு சென்று மக்களை சந்திக்கும் போது பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவும் நேர்மறையாக உள்ளது என்று ஜோனதன் வேலா விவரித்தார்.
வருகின்ற 14 ஆம் தேதி நடைபெறும் மலாக்கா மாநில தேர்தலில் மாநில மக்களின் தேர்வு பக்காத்தான் ஹராப்பானின் தேர்வாக இருக்க வேண்டும். இதன் மூலம், மத்திய அரசாங்கத்துடன் மாநில அரசாங்கம் இணைந்து பயணிக்க முடியும். இது மலாக்கா மாநில மக்களுக்கு பெரும் அனுகூலத்தை ஏற்படுத்தும் என்று ஜோனதன் வேலா தெரிவித்தார்.








