ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷாம்ஷுக்கஹார் முஹமட் டெலியின் மாநிலத் தேர்தல் பிரசார பேச்சு தொடர்பான விசாரணை ஆவணங்களை, மேலதிக நடவடிக்கைகளுக்கான அறிவுறுத்தல்களுடன் அரசாங்க வழக்கறிஞர்கள் மீண்டும் போலீசாருக்கு அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து எழுத்துப்பூர்வமான நாடாளுமன்ற பதிலில், இந்த விசாரணை ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 21 -ஆம் தேதி நெகிரி செம்பிலான் அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் செப்டம்பர் 3-ஆம் தேதி விசாரணை அதிகாரிக்கான பல்வேறு அறிவுறுத்தல்களுடன் போலீசாருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை போலீசார் தற்போது மேற்கொண்டு வருவதாகவும், அவை நிறைவடைந்த பின்னர் விசாரணை ஆவணங்கள் மீண்டும் மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 4A(1), குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505(b) மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்ற கொள்கையை அரசாங்கம் எப்போதும் மதிக்கிறது என ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு அளித்த பதிலில் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஷாம்ஷுக்கஹார் மீது அவதூறான மற்றும் தேசத்துரோகத் தன்மை கொண்ட கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக இதுவரை ஏன் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என ஆர்எஸ்என் ராயர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, சிரம்பான் ஜெயாவில் ஷாம்ஷுக்கஹார் ஆற்றிய உரையின் காணொளியை பார்த்த 55 வயதுடைய நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை காவல்துறை திறந்தது குறிப்பிடத்தக்கது.








