புதாதான், நவம்பர்.23-
சபாவின் 17வது மாநிலத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை, RPS1 ஏன்று பெயரிடப்பட்ட சபா மேம்பாட்டுத் திட்டம் 1 என்ற பெயரில் நீண்ட கால, விரிவான பலன்களை மக்களுக்கு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கம் செயல்படுத்தும் மலேசியத் திட்டங்களைப் போலவே, இந்த RPS1 திட்டமும் ஒரேயொரு தேர்தலுடன் நின்றுவிடாமல், RPS2, RPS3 எனத் தொடர்ச்சியான மேம்பாட்டிற்கு தேசிய முன்னணியின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாக அவர் விளக்கினார்.
இளைஞர்கள், பெண்கள், கிராமங்கள், நகர்ப்புறங்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், வட்டாரங்களை ஒன்றிணைத்ததாகவும், நடைமுறைப்படுத்தக்கூடிய அம்சங்களைக் கொண்டதாகவும் இந்தத் தேர்தல் அறிக்கை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடும் 45 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்கும் காந்தமாகத் திகழும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.








