கோத்தா கினபாலு, டிசம்பர்.10-
சபா மாநில அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதையடுத்து, அப்பதவியில் புதிய தலைவராக அம்மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜாஃப்ரி அரிஃபின் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில், அம்மாநில அம்னோ துணைத் தலைவராக ஹஸ்னோல் அயூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் புதிய நியமனங்களை மேற்கொள்ள, அம்னோ தலைவரான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, அம்னோ அரசியலமைப்புச் சட்டம், விதி 12.5-ஐப் பின்பற்றியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சபா மாநிலத்தில், கட்சி நிர்வாகத்தைத் தடையின்றித் தொடர்வது, ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நியமனங்களானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய தலைமைத்துவத்திற்கு அம்னோவைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








