பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.06-
ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு "பின்வாசல்" அல்லது மறைமுக நடவடிக்கைகளுக்கும் எதிராக அம்னோ உறுதியாக நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான எந்தவொரு சூழ்ச்சியிலும் அம்னோ ஈடுபடாது. அரசாங்கத்தின் பதவிக் காலம் முடியும் வரை அம்னோ இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
"tebuk atap” போன்ற குறுக்குவழி அரசியல் மாற்றங்களை அம்னோ ஒரு போதும் ஆதரிக்காது. அரசியல் நிலைத்தன்மையே நாட்டின் தற்போதைய தேவை என்பதில் அம்னோ தெளிவாக உள்ளது என்பதையும் அஹ்மாட் ஸாஹிட் விளக்கினார்.
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்று அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சாலே அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஸாஹிட் ஹமிடியின் இந்த அறிக்கை அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
பாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் முபாக்காட் நேஷனல் (Muafakat Nasional) கூட்டணியை அமைப்பது போன்ற ஆலோசனைகளை அம்னோ ஏற்கனவே நிராகரித்து விட்டது. 16-வது பொதுத் தேர்தல் வரை அம்னோ ஒற்றுமை அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயல்படும் என்பதை துணைப் பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் மீண்டும் வலியுறுத்தினார்.








