அரசாங்கத்தின் நிதியுதவியும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களும் சிறு தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு எவ்வாறு துணைநிற்கின்றன என்பதற்கு மூன்று இந்தியத் தொழில்முனைவோரின் வெற்றிப் பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையிலான அமைச்சின் கீழ் செயல்படும் முகமைகளின் நிதியுதவியைப் பயன்படுத்தி, சவால்களைக் கடந்து தங்களது தொழில்களை விரிவுபடுத்தியுள்ள இவர்களின் அனுபவங்கள் மற்ற தொழில்முனைவோருக்கும் நம்பிக்கையூட்டுகின்றன.
கலைவாணி பெரியசாமி: 26 ஆண்டுகால மோட்டார் சைக்கிள் தொழிலுக்கு நிதியுதவி துணை!
பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் டத்தோ கிராமாட்டில் தனது கணவருடன் இணைந்து கடந்த 26 ஆண்டுகளாக Mars Motor என்ற மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையத்தை நடத்தி வருகிறார் கலைவாணி பெரியசாமி.
தொழிலில் அவர் எதிர்கொண்ட முக்கியச் சவால், தேவையான உதிரிப்பாகங்களைப் போதிய அளவில் இருப்பில் வைத்திருப்பதாகும். மூலதனப் பற்றாக்குறையால் அடிக்கடி விநியோகஸ்தர்களிடம் சென்று உதிரிப்பாகங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்திய Amanah Ikhtiar Malaysia (AIM) வாயிலாக நிதியுதவி பெற்றது அவரது தொழிலுக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் உதிரிப்பாகங்களை மொத்தமாக வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள முடிந்தது. AIM-இன் Dana PENN திட்டத்தின் கூடுதல் நிதியுதவி, அதிக விலையுள்ள சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரிப்பாகங்களை வாங்கவும் உதவியது.
இதுவரை AIM மூலம் மொத்தம் RM18,000 நிதியுதவி பெற்றுள்ள கலைவாணி, தொழில்முனைவோர் பயிற்சிகளின் வாயிலாகப் புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளார். தற்போது மோட்டார் சைக்கிள்களுக்கான வண்ணம் பூசும் சேவையை வழங்கும் இரண்டாவது தொழில் நிலையத்தைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.

அபிராமி ரெங்கசாமி: வீட்டில் தயாரித்த குல்ஃபி... பல்பொருள் அங்காடிகளை நோக்கிய வளர்ச்சி!
பாரம்பரிய இந்திய இனிப்பான குல்ஃபி மீது கொண்ட ஆர்வத்தைத் தொழிலாக மாற்றியவர் அபிராமி ரெங்கசாமி. கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வேலையை இழந்ததைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தே ஐஸ்கிரீம் தயாரிக்கும் சிறுதொழிலைத் தொடங்கினார்.
அவரது முயற்சி பின்னர் Lotus Cofy House நிறுவனமாக வளர்ந்து, Jumboo Ice Cream என்ற வர்த்தகப் பெயரில் குல்ஃபி தயாரிக்கும் நிலையை எட்டியது.
ஆனால், குறைந்த உற்பத்தித் திறன், இறக்குமதிப் பொருட்களைச் சார்ந்திருத்தல், அதிக உற்பத்திச் செலவு ஆகியவை தொழிலை விரிவுபடுத்துவதில் சவால்களாக அமைந்தன.
இந்நிலையில், SME Corp Malaysia வழங்கிய RM76,000 I-BAP மானியம் அவரது தொழிலுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த நிதியைக் கொண்டு மூன்று இயந்திரங்களை வாங்கியதால் உற்பத்தியை அதிகரிக்கவும், குல்ஃபியை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் முடிந்தது.
தற்போது மலேசியா முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் தனது தயாரிப்புகள் விற்பனைக்கு வருவதுடன், எதிர்காலத்தில் வெளிநாட்டுச் சந்தைகளிலும் தடம் பதிக்க வேண்டும் என்பதே அபிராமியின் இலக்காக உள்ளது.

முகிலன் ரகுநாதன்: தந்தையின் தொழிலுக்கு மறுவாழ்வு... வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி!
மறைந்த தனது தந்தை நடத்தி வந்த வாகன உதிரிப்பாகத் தொழிலை மீண்டும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியவர் முகிலன் ரகுநாதன்.
தனது சொந்தச் சேமிப்பைக் கொண்டு வீட்டிலிருந்தே பயன்படுத்தப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யத் தொடங்கினார். போதிய மூலதனம் இல்லாததால் பொருட்களை இருப்பில் வைத்திருப்பது, விநியோகத்தை நிர்வகிப்பது, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது போன்றவற்றில் சிரமங்களை எதிர்கொண்டார்.
இதற்குத் தீர்வாக TEKUN Nasional-இன் SPUMI திட்டத்தின் கீழ் RM30,000 நிதியுதவி பெற்றார். இதனைச் செயல்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்தி தனது வணிகத்தையும் உதிரிப்பாக இருப்பையும் விரிவுபடுத்தினார்.
இன்று கெப்பாளா பத்தாஸ் பகுதியில் சொந்த வளாகத்தில் செயல்படும் Velan Trading Autopartz நிறுவனத்தில் 11 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வாகன உதிரிப்பாகங்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்தியத் தொழில்முனைவோருக்கு RM220 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு
கலைவாணி, அபிராமி, முகிலன் ஆகியோரின் வெற்றிப் பயணங்களைப் போலவே, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையிலான அமைச்சின் கீழ் செயல்படும் பல்வேறு முகமைகள் வாயிலாக ஏராளமான இந்தியத் தொழில்முனைவோர் நிதியுதவி பெற்று தங்களது வணிகங்களை மேம்படுத்தி வருகின்றனர்.
2026ஆம் ஆண்டில் MUDRA (இந்தியத் தொழில்முனைவோர் மூலதனம் மற்றும் பொருளாதார ஊக்கத்தொகை) திட்டத்தின் கீழ் இந்தியத் தொழில்முனைவோருக்காக RM220 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் திட்டவாரியான நிதி ஒதுக்கீடுகள்:
• SPUMI – TEKUN Nasional: RM120 மில்லியன்.
• BIZRAC – SME Bank: RM50 மில்லியன்.
• BRIEF-i – Bank Rakyat: RM15 மில்லியன்.
• பெண் 2.0 – Amanah Ikhtiar Malaysia: RM27 மில்லியன்.
• பக்தி மடானி – மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM): RM1 மில்லியன்.
• சுழல் மூலதன நிதி (TMP): RM10 மில்லியன்.
இந்த நிதியுதவிகள் இந்தியத் தொழில்முனைவோர் தங்களது தொழில்களைத் தொடங்கவும், விரிவுபடுத்தவும், புதிய சந்தைகளை அடையவும் வழிவகுப்பதுடன், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வலுசேர்க்கின்றன.








