கோலாலம்பூர், டிச. 24-
தனது மூவார் நாடாளுமன்றத் தொகுதிக்கு மக்களின் செலவினத்திற்கு மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரத்து 300 ரிங்கிட்டை வழங்குவதை நிறுத்திக்கொண்டு இருக்கும் அரசாங்கம் முடிவை எதிர்த்து அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மற்றும் தொகுதியை சேர்ந்த மூன்று வாக்காளர்கள் தொடுத்திருந்த வழக்கில் இன்று தோல்விக் கண்டனர்.
அந்த நால்வரின் விண்ணப்பத்தையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கு மீதான விண்ணப்பம் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதில் நீதிமன்றம் மனநிறைவு கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அகமட் வான் சல்லே தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தவிர ஒரு தொகுதிக்கு மானியம் ஒதுக்கீடு செய்வது, எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்வது என்பது நாடாமன்ற நிர்வாக கொள்கை சார்ந்த விவகாரமாகும். ஏற்கனவே இதேபோன்ற ஒரு வழக்கை ஏற்கனவே தொடுத்திருந்த சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஜெயக்குமாருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு நீதிமன்றம் கட்டுப்படுகிறது.
எனவே சையிட் சாடிக்கின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.