பினாங்கு, ஜூன் 20-
பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதியைத் தற்காப்பதில் பெரிக்காதான் நசியனால், இம்முறை சிரமத்தை எதிர்நோக்குவதை, பெயர் குறிப்பிட விரும்பாத அக்கூட்டணியின் முக்கியத் தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜூலை மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் அத்தேர்தலில், மலாய் அல்லாத வாக்காளர்களின் மனங்களை வெல்வதில் அக்கூட்டணி தோல்வி கண்டுள்ளது. கிட்டத்தட்ட அத்தரப்பினரில் பெரும்பான்மையினர் பக்காத்தான் ஹாராப்பான்-னுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
நிலைமை அவ்வாறு இருக்க, பெரும்பான்மை மலாய் வாக்காளர்களின் ஆதரவும் பெரிக்காதான் நசியனால்-லுக்கு சரியத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.
பக்காத்தான் ஹாராப்பான் ஒன்றும் பலம் வாய்ந்த கூட்டணி அல்ல. ஆனால், பெரிக்காதான் நசியனால் கூட்டணி தற்போதைக்கு மிகவும் பலவீனமாக உள்ளது.
பக்காத்தான் ஹாராப்பான்-னுடன் தேசிய முன்னணியின் கடைநிலை உறுப்பினர்கள் குறிப்பாக, பினாங்கு அம்னோ-வினர் கொண்டிருக்கின்ற பலம், பெரிக்காதான் நசியனால் மீதான மலாய்க்காரர்களின் ஆதரவைக் குறைக்க செய்யும்.
ஆகையால், சுங்கை பக்காப் இடைத்தேர்தலில், தங்கள் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றாரவர்.








