புத்ராஜெயா, நவம்பர்.28-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அந்தரங்க அரசியல் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து இருக்கும் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின், இன்று புத்ராஜெயாவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணையில் ஆஜராகியுள்ளார்.
குத்தகை தொடர்பில் தம்மிடமிருந்து 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாக ஷாம்சுல் இஸ்கண்டார் பெற்றதாக வர்த்தகர் ஆல்பெர்ட் தே பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தற்போது விசாரணையின் பிடியில் அந்த முன்னாள் அரசியல் செயலாளர் உள்ளார்.
புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையத்தை மதியம் 12 மணிக்கு வந்தடைந்த ஷாம்சுல் இஸ்கண்டார் நேராக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். முன்னதாக ஷாம்சுல் இஸ்கண்டாரின் வருகைக்காக எஸ்பிஆர்எம் அதிகாரிகள் காத்திருந்தனர்.
தனக்கு எதிராக வர்த்தகர் ஆல்பெர்ட் தே சுமத்தியுள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஷாம்சுல் இஸ்கண்டார் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.








