புத்ராஜெயா, டிச. 12-
துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான விசா முறை தொடர்பிலான 40 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
பாரிசான் நேஷனல் ஆட்சியின் போது நாட்டின் உள்துறை அ மைச்சர் என்ற முறையில் விஎல்என். எனப்படும் அந்நியத் தொழிலாளர்களுக்கான விசா முறை தொடர்பிலான ஒருங்கிணைந்த சேவைக்கான குத்தகையை அல்ட்ரா கிரானா சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு வழங்கியது மூலம் அந்த நிறுவனத்திடமிருந்து லட்சக்கணக்கான ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அகமட் ஜாஹிட் மீது 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தது.
இதில் 33 குற்றச்சாட்டுகள், ஒரு கோடியே 35 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி சிங்கப்பூர் டாலர் அல்லது 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்டதாகும்.
இதர 7 குற்றச்சாட்டுகள், 11 லட்சத்து 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அல்லது 40 லட்சம் ரிங்கிட் மற்றும் 15 ஆயிரம் சுவிஸ் பிரான்க் அல்லது 79 ஆயிரம் மலேசிய ரிங்கிட், 15 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 70 ஆயிரத்து 200 ரிங்கிட் சம்பந்தப்பட்ட லஞ்சப் பணமாகும்.
விசா குத்தகை வழங்கப்பட்ட அதே நோக்கத்திற்காக அல்ட்ரா கிரானா சென்.பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து ஜாஹிட் லஞ்சம் பெற்றதாக 40 குற்றச்சாட்டுகளிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த 40 குற்றச்சாட்டுகளையும் ஜாஹிட், கடந்த 2014 ஆம் ஆண்டுக்கும், பாரிசான் நேஷனல் ஆட்சி கவிழ்ந்த 2018 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புத்ராஜெயா, ஸ்ரீ சத்ரியா, பிரிசிண்ட் 16, புத்ராஜெயா மற்றும் கன்ற ஹையிட்ஸ் காஜாங் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் புரிந்ததாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பாரிசான் நேஷனல் ஆட்சியில் நாட்டின் துணைப்பிரதமர் என்ற முறையில் ஜாஹிட்டிற்கு எதிரான 40 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை பிராசிகியூஷன் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் ஜாஹிட்டை விடுதலை செய்தது.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட மேல்முறையீட்டில் அவரின் விடுதலையை அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ருஸிமா கசாலிi , பிராசிகியூஷன் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.