கோலாலம்பூர், அக்டோபர்.24-
வரி உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவுடன் மலேசியா நடத்தி வரும் பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் வரி மீதான உடன்பாட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவிற்கு வருகை புரியவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடத்தப்படும் சந்திப்பின் போது, இதற்குத் தீர்வு காணப்படும் என்று தெங்கு ஸாஃப்ருல் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 26 ஆவது ஆசியான் பொருளாதார சமூகவியல் மன்றக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்விவரத்தை வெளியிட்டார்.
மலேசியா உட்பட ஆசியான் நாடுகளுக்கு அமெரிக்க விதித்துள்ள இறக்குமதிக்கான வரி விகிதம் குறித்து டிரம்புடன் முக்கிய விவாதம் நடைபெறும்.
ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவார் என்று தெங்கு ஸாஃருல் மேலும் விளக்கினார்.








