கோத்தா கினபாலு, நவம்பர்.25-
சபா 17-வது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, நடந்த சிறிய அளவிலான தேர்தல் குற்றங்கள் தொடர்பாக, 85 புகார்கள் பதிவாகியுள்ளதாக சபா மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, 53 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஜவுதே டிகுன் தெரிவித்துள்ளார்.
சிறிய அளவிலான குற்றங்கள் பதிவாகியிருந்தாலும் கூட, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சுமூகமான முறையிலேயே நடைபெற்று வருவதை ஜவுதே டிகுன் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை 8.50 மணியளவில் முன்கூட்டியே வாக்குச் செலுத்திய ஜவுதே, மோசமான வானிலை நிலவி வருவதால், முன்கூட்டியே வாக்காளர்கள் அனைவரும் விரைவில் வந்து வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.
சபா மாநிலம் முழுவதும் உள்ள 58 வாக்களிப்பு மையங்களில், போலீஸ் துறையைச் சேர்ந்த 13,660 தகுதிப் பெற்ற முன்கூட்டியே வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.








