குவாந்தான், ஜனவரி.10-
இந்திரா மாஹ்கோத்தா எம்.பி.யான சைஃபுடின் அப்துல்லாவைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவிற்கு, அத்தொகுதியின் பெர்சாத்து தலைமையகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சைஃபுடின் அப்துல்லாவுக்கு நியாயமான விசாரணை வாய்ப்பு வழங்கப்படாமலேயே அவர் நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் பெர்சாத்து தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தொடர்ந்து சைஃபுடின் அப்துல்லாவுக்குத் தங்களது ஆதரவை வழங்கப் போவதாகவும் இந்திரா மாஹ்கோத்தா பெர்சாத்து துணைத்தலைவர் மாட் ஸாஹிட் அபு ஹசான் தெரிவித்துள்ளார்.
டான் ஶ்ரீ முகைதின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் பலம் பொருந்திய தலைவர்களில் ஒருவரான சைஃபுடின் யாசின், கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவர் கட்சியின் அரசியலமைப்பை மீறியதாகக் கூறப்பட்ட நிலையில், குற்றத்தின் தன்மை குறித்து விளக்கமளிக்கப்படவில்லை.
இந்நிலையில், தனது பதவி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக முன்னாள் அமைச்சரான சைஃபுடின் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.








