கோலாலம்பூர், அக்டோபர்.27-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோலாலம்பூர் வருகையின் போது விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வரவேற்பு அதிகபட்சமானது என்று தாம் கருதுவதாக முகைதீன் தமது முகநூலில் குறிப்பிட்டார்.
அதிகபட்சமான உற்சாக வரவேற்பும், குதூகலமும் ஒரு பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியா, இத்தகைய விருந்தினரை வரவேற்பதில், அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு அரச தந்திர கண்ணியத்தை மதிப்பிடுகிறதா அல்லது மனிதநேயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுகிறதா? என்று முன்னாள் பிரதமரான முகைதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம் மக்களவையில் நினைவூட்டியது போல பாலஸ்தீன மக்கள் காஸாவில் இரத்தத்தில் உறைந்து கொண்டும், பட்டினியில் வாடிக் கொண்டும் இருக்கும் போது, மலேசிய மண்ணில் டிரம்பிற்கு இத்தகைய உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது ஏற்புடையது அல்ல என்று முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் யூத ஆட்சியின் அட்டூழியங்களைப் பாதுகாக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஆணவத்தின் சின்னமாக டிரம்ப் உள்ளார். அத்தகைய நபரை அதிகப்படியான உற்சாகத்துடன் வரவேற்பது மலேசியாவிற்கு பெரும் அவமானம் என்று தனது முகநூலில் முகைதீன் தெரிவித்துள்ளார்.








