அலோர் ஸ்டார், ஜனவரி.04-
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற அம்னோ இளைஞர் அணியின் ஆவேசமான முழக்கம் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு அல்ல என கெடா மாநில அம்னோ அதிரடியாகத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் எதிர்காலத்தையும் திசைவழியையும் வெறும் பிரபலத்தன்மையை வைத்தோ அல்லது சிலரது உணர்ச்சிகளை வைத்தோ தீர்மானிக்க முடியாது என்றும், அதற்குரிய முறையான வழிகளை கட்சியின் உயர்மட்டக் குழுவே இறுதி முடிவெடுக்கும் என்றும் கெடா அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாய்ஃபுல் ஹாஸிஸி ஸைனொல் அபிடின் எச்சரித்துள்ளார்.
மற்ற கட்சிகளில் நடக்கும் உள்விவகாரங்களைச் சரி செய்ய அம்னோ தன்னைத் ஆணா பலிகடா ஆக்கிக் கொள்ளக்கூடாது எனத் தெரிவித்த அவர், அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைக் குலைத்து விடும் எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். டாக்டர் அக்மால் சாலே தலைமையிலான இளைஞர் அணி, பாஸ் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும் எனப் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ள நிலையில், கெடா அம்னோவின் இந்த நிதானமான, அதிகாரப்பூர்வமான அறிக்கை கட்சிக்குள் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.








