கோலாலம்பூர், டிசம்பர்.10-
நாடாளுமன்ற மேலவையில் இன்று புதன்கிழமை, மூன்று ஆண்டுகளுக்கான செனட்டர் பதவியின் முதலாவது தவணையை நிறைவு செய்த இரண்டு துணை அமைச்சர்கள், இரண்டாவது தவணையாக செனட்டர்களாகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுஸியா சால்லே மற்றும் தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகிய இருவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் அவாங் பெமீ அவாங் அலி பாசா முன்னிலையில், பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த மறுநியமனங்களானது, இரு துணை அமைச்சர்களும் 2028-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் தேதி வரையில், அமைச்சரவையில் தங்கள் பணிகளைத் தொடர வழிவகை செய்கிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தவணையாக செனட்டர்களாக நியமிக்கப்பட்ட அவர்களின் பதவிக்காலம் இன்று டிசம்பர் 10-ஆம் தேதியோடு நிறைவு பெற்றது.
இந்நிலையில், மேலவைத் தலைவர் அவாங் பெமீ, அவ்விரு செனட்டர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்ததோடு, அவர்கள் இருவரும் தங்களது கடமைகளைத் தொடர்ந்து சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மலேசிய மாமன்னரால் நியமிக்கப்பட்ட இந்த நியமனங்களானது, கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவுகள் 45(1)(b), 45(3) மற்றும் 45(3A) ஆகிய விதிகளுக்கு உட்பட்டதாகவும் அவாங் பெமீ குறிப்பிட்டார்.








