தபுங் ஹாஜி தொடர்பில், அரச விசாரணை ஆணையமான ஆர்.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையை விவாதிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
உடல்நலக் குறைவு காரணமாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால், இன்றைய மக்களவை சிறப்புக் கூட்டத்தில் அவரால் பங்கேற்க இயலவில்லை.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடீன் ஹாசன், அவை விதி 11(3)-ஐ மேற்கோள்காட்டி, தபுங் ஹாஜி தொடர்பான ஆர்.சி.ஐ அறிக்கை பொதுமக்களின் முக்கிய அக்கறைக்குரிய விவகாரம் என்பதால், பிரதமர் நேரடியாக அவையில் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், பிரதமர் தனது பணிக்குத் திரும்பிய பின்னர் இந்த அறிக்கையை அவரே நேரடியாகத் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்திலும் கலந்துகொள்வதே பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற சபாநாயகர் தான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமட் ஜாஹித் ஹமிடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவையில் இருப்பதால், பிரதமர் இல்லாத நிலையிலும் சிறப்புக் கூட்டத்தைத் தொடர முடியும் என்றார்.
மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், அவற்றை, தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்கள் பின்னர் ஆய்வு செய்ய முடியும் என்றும் ஜோஹாரி அப்துல் குறிப்பிட்டார்.
அதேவேளையில், அவை விதியை மீண்டும் மேற்கோள்காட்டிய அவர், நாடாளுமன்றத்தில் அலுவல் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சிகள், விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தக்கியுடீன் ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து, விவாதத்தில் பங்கேற்க விரும்பாத உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறலாம் என்று சபாநாயகர் ஜோஹாரி அப்துல் அறிவித்தார்.
இதன் காரணமாக, பெரும்பான்மையான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








