கோத்தா கினபாலு, நவம்பர்.14-
சபாவைத் தளமாகக் கொண்ட உப்கோ கட்சி, பக்காத்தான் ஹராப்பானிலிருந்து வெளியேறியது, தாம் எடுத்த ஒரு சிறந்த முடிவாகும் என்று முன்னாள் தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எவோன் பெனடிக் தெரிவித்துள்ளார்.
பக்காத்தானிலிருந்து உப்கோவை வெளியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு இலகுவானது அல்ல. ஒரு தந்தையாகவும், ஒரு தலைவராகவும் இரு கொள்ளித் தலையாக மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் தாம் இருந்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய எவோன் பெனடிக், போர்னியோ போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பக்காத்தானை விட்டு விலகுவது என்பது மாதக் கணக்கான சிந்தனை மற்றும் கலந்து ஆலோசிப்பாகும். நீண்ட தேடலுக்குப் பிறகு ஒரு முடிவு கிடைத்தது. உப்கோ தலைவர் என்ற முறையில் நான் எடுத்த சிறந்த முடிவாகும். இது உப்கோ கட்சிக்கு மட்டும் அல்ல, எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவாகும் என்று எவோன் பெனடிக் குறிப்பிட்டார்.








