சுங்கைபூலோ, டிச. 13-
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குதிக்கு ஏற்ப, தொகுதி நடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தம்முடைய சம்பளம் மற்றும் அலவன்ஸ தொகையிலிருந்து ஒரு சல்லிக்காசுக்கூட எடுக்காமல் அந்த தொகையை அப்படியே தொகுதிக்கு தாம் வழங்கி வருவது, கடப்பாடு மட்டுமல்ல. அது ஒரு வேள்வியாகும் என்கிறார் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்.
பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதியில் அம்னோவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மலாய்க்காரர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றவரான கைரி ஜமாலுடினை அதிரடியாக வீழ்த்தி, சுங்கை பூலோ தொகுதியை PKR தக்கவைத்துக்கொண்டது மூலம் நாட்டு மக்களின் மிகுந்த கவன ஈர்ப்புக்குரிய ஒரு தலைவராக ரமணன் பார்க்கப்பட்டார்.

சுங்கை பூலோ தொகுதியில் ரமணனின் மகத்தான வெற்றியும், அவர் ஏற்படுத்திய அதிர்வலையும், மக்களிடம் கொண்டுள்ள நற்மதிப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தமது அமைச்சரவையில் ரமணனை தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக நியமித்தார்.
டத்தோஸ்ரீ ரமணன், துணை அமைச்சராக பொறுப்பேற்று நேற்று டிசம்பர் 12 ஆம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாகிறது. இந்த ஓராண்டு நிறைவையொட்டி தேசிய செய்தி நிறுவனமான பெர்னாவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் ரமணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தமது சம்பளத்தையும், அலுவன்ஸ் தொகையையும் அப்படியே தொகுதியில் உள்ள பள்ளிவாசல், சூராவ், கோயில், தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி வருவதை ஒரு வேள்ளியாக கொண்டு இருப்பதாக ரமணன் விளக்கினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு சுங்கை பூலோ தொகுதியில் தம்முடைய சம்பளம் மற்றும் அலவன்ஸ தொகையின் மூலம் இதுவரை 5 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை தொகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கியிருப்பதாக ரமணன் குறிப்பிட்டார்.
தம்மைப்பொறுத்தவரை மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம் என்றால் அதனை நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில், சுங்கை பூலோவில் தம்முடைய தவணைக்காலம் முடிவுறும் வரையில் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்கு உறுதி பூண்டு இருப்பதாக ரமணன் குறிப்பிட்டார்.
இவ்வாறு சம்பளத்தையும், அலவன்ஸ் தொகையையும் தொகுதி மக்களுக்கு பகிர்ந்து அளித்து வருவது குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆத்திரத்திற்கும், கண்டிப்புக்கும் தாம் ஆளாகியிருப்தையும் ரமணன் நினைவுகூர்ந்தார்.

ஆனால், வரக்கூடிய பொதுத் தேர்தலிலும் தொகுதி மக்கள் தொடர்ந்து தம்மை வெற்றி அடையச் செய்வார்களோனால், தற்போது தாம் கடைப்பிடித்து வரும் இதே அணுகுமுறை தொடரும் என்று ரமணன் உறுதி அளித்தார்.
சம்பளத்தையும், அலவன்ஸ தொகையையும் பயன்படுத்தி, வழிபாட்டுத் தலங்களுக்கு தாம் வழங்கி வருகின்ற இந்தப் பணம், வழிப்பாட்டுத் தலங்களை சீரமைப்பதற்காக அல்ல. மாறாக, உதவி கேட்டு அங்கு வருகின்ற ஏழை மக்களின் துயர்துடைப்பதற்காக செலவிடப்பட வேண்டும் என்ற ஒரு நிபந்தனையின் அடிப்டையில் இன்றளவும் அந்த உதவி சென்றடைகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியும் தவறாது நிறைவேற்றி வருவதாக தமது நேர்காணலில் ரமணன் தெரிவித்தார்.








