வாஷிங்டன். நவ.6-
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
அதிபராக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனல்ட் டிரம்ப் 267 இடங்களிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 226 இடங்களிலும் வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 50 மாநிலங்களில் உள்ள 538 பிரதிநிதிகளில் 270 பேர் ஆதரவு பெறும் வேட்பாளர், அந்நாட்டின் அதிபராக வெற்றி பெற முடியும். தொடக்கம் முதலே டிரம்ப் அபரிமிதமான முன்னிலையில் இருந்து வந்தார்.
டொனால்டு டிரம்ப் வெற்றி, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அமெரிக்காவின் 238 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக வாகை சூடுவார் என்று உலகம் முழுவதும் பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸின் வெற்றி , பகற்கனவாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.
இன்னும் சற்று நேரத்தில் டொனால்டு டிரம்ப் நாட்டு மக்கள் மத்தியில் வெற்றி உரையாற்றுவார் என்றும் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். குடியரசு கட்சியினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.








