கோலாலம்பூர், நவம்பர்.13-
டத்தோ ஶ்ரீ தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவியை வகிப்பதற்கான இறுதி நாள் வரும் டிசம்பர் 2 ஆம் தேதியாகும்.
அமைச்சர் பதவியை வகிப்பதற்கு தெங்கு ஸஃருலுக்கு வாகனமாக அமைந்த செனட்டர் பதவி காலம் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
நாடாளுமன்ற மேலவையில் ஒருவர், செனட்டர் பதவி வகிப்பதற்கு ஒரு தவணைக்கு 3 ஆண்டு காலம் அனுமதிக்கப்படுகிறது. ஒருவர் மற்றொரு தவணையும் செனட்டர் பதவியை வகிப்பதற்கு மேலவை சட்டம் அனுமதிக்கிறது. குறைந்தபட்சம் ஒருவர் இரண்டு தவணைக் காலம், 6 ஆண்டுகளுக்கு மட்டுமே செனட்டர் பதவியை வகிக்க முடியும்.
தெங்கு ஸஃப்ருல், ஏற்கனவே டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் செனட்டராக நியமிக்கப்பட்டு நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தில் மீண்டும் ஒரு முறை செனட்டராக நியமிக்கப்பட்டு தற்போதைய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இனி பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று திரும்புவதன் மூலமே தெங்கு ஸஃப்ருல் அமைச்சர் பதவி வகிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.








