Aug 28, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் காட்டுவதில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம் - சிலாங்கூர் மந்திரி பெசார் எச்சரிக்கை
அரசியல்

சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் காட்டுவதில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம் - சிலாங்கூர் மந்திரி பெசார் எச்சரிக்கை

Share:

மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவுக்கு, விசுவாசமாக இருப்பதில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டாம் என அனைத்துத் தரப்பினருக்கும் அம்மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரச குடும்பம், இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாதுகாப்பது போல் பாசாங்கு காட்டி வரும் சில தரப்பினர், உண்மையில் தங்கள் அரசியல் லாபத்திற்காகவே அதனை செய்கிறார்கள் என்றும் அமிருடின் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளையில், தங்களது நலன்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவானவுடன், அதே தரப்பினர் தங்களது நிலைப்பாட்டையும் பேச்சுவார்த்தைத் தொனியையும் மாற்றிக் கொள்வதாகவும் அவர் விவரித்துள்ளார்.

மேலும், வெளி தரப்பினர், சிலாங்கூர் அரச குடும்பத்தின் நம்பகத்தன்மையை அவமதித்த போதும், அரசியல் காரணங்களால் அவர்கள் மௌனமாக இருந்தனர் என்றும் அமிருடின் ஷாரி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் மன்னராட்சி முறை மற்றும் தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாரா குறித்து தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, கெடா மாநில மந்திரி பெசார் சனுசி நோர் சுல்தானை அவமதித்த வழக்கில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமிருடினும் இன்று அது தொடர்பாகவே மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என நம்பப்படுகின்றது.

Related News