கோத்தா கினபாலு, டிசம்பர்.15-
சபா மாநிலத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களது பொறுப்புகளையும், பங்களிப்புகளையும் உணர்ந்து, அடுத்த 5 ஆண்டுகளில் தங்களது கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட மாநில சபாநாயகர் டத்தோ ஶ்ரீ கட்ஸிம் எம் யாஹ்யா, மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில், அவர்கள் அனைவரும் மாநில சட்டமன்றத்திற்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான சபா பட்ஜட் விவாத அமர்வில் உரையாற்றிய கட்ஸிம் எம் யாஹ்யா தெரிவித்தார்.
மாநில சட்டமன்றக் கூட்டமானது, சபாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தகவல்களையும், திட்டங்களையும் பகிரும் இடமாக இருக்கும் வகையில், உறுப்பினர்கள் அனைவரும் பண்பட்ட, திறமையான விவாத நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டமானது, இன்று தொடங்கி, வரும் புதன்கிழமை வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








