தாவாவ், நவம்பர்.27-
இன விவகாரங்கள் மற்றும் இன மோதல்களில் அரசியல் ரீதியான அணுகுமுறைகள் மக்களுக்கும், நாட்டிற்கும் பயன் அளிக்காது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மாறாக, நேர்மை, நம்பகத்தன்மை, நல்லாட்சி மற்றும் மக்களின் நலன்களை முன்னுரிமையாகக் கொண்டு, அவர்களின் வாழ்வியலை உயர்த்துவதில்தான் தாம் உறுதியாக இருந்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சில தரப்பினர், மக்களிடையே விரோத மனப்பான்மையை உருவாக்கும் அரசியல் அணுகுமுறையையும், பாணியையும் கையாண்டு வருகின்றனர். ஆனால், தாம் அத்தகைய அணுகுறையை கையாளவில்லை என்று பிரதமர் விளக்கினார்.
நாட்டில் மக்களின் எதிர்காலத்திற்காக ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பக்கூடிய கட்டமைப்பின் அவசியத்தைத் தாம் தேர்வு செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சபா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு தாவாவில் Fiesta Demi Merotai Harapan Urang Sabah எனும் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
பூகிஸ்காரர்கள், மலாய்க்காரர்கள் மீது கோபமாக இருப்பதாகவும், மலாய்க்காரர்கள், சீனர்கள் மீது சினம் கொண்டு இருப்பதாகவும், சபா மக்கள், தீபகற்ப மலேசியா மீது வெறுப்பைக் கொண்டு இருப்பதாகவும் கூறி, தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் மற்றவர்களைப் போல் நம்மால் அத்தகைய அணுகுமுறையைக் கையாள முடியாது என்று பிரதமர் விளக்கினார்.
ஒரு மாநிலத்தை மற்றும் நாட்டை வழிநடத்த விரும்பும் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும், மக்களின் நம்பிக்கையையும், அவர்களுக்கு நாம் வழங்கியுள்ள உறுதிமொழியையும் காப்பாற்ற வேண்டும். காரணம், நம்மை மதிப்பீடு செய்யக்கூடிய இடத்தில் இருப்பவர்கள் மக்கள்தான் என்று பிரதமர் தமது தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தினார்.








