அலோர் ஸ்டார், பிப்ரவரி.14-
பிகேஆர் கட்சியானது தற்போது மிகுந்த வலுவுடன் இருப்பதாகவும், தொடர்ந்து அதன் பலத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும் போது பிகேஆர் கடுமையான சவால்களை எதிர்கொண்டாலும் கூட, குழுவாக இணைந்து பலத்தைத் திரட்டி செயல்படுவது, கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என நேற்று கெடா மாநில பிகேஆர் கட்சி ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியை எப்படி மேலும் பலப்படுத்துவது என உறுப்பினர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ள அன்வார், கட்சி எல்லா விதத்திலும் சரியாக இருப்பதாகக் கருதக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தான் பிரதமராகப் பதவியேற்றதில் தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதிலேயே தனது முழு கவனமும் இருந்ததாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
இதனால் பிகேஆர் கட்சியில் சரியாக கவனம் செலுத்த இயலாமல் போனதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
யார் என்ன சொன்னாலும், கட்சி உறுப்பினர்கள் தங்களது கடமைகளில் கவனத்துடன் செயல்பட்டு, இலக்கை அடைய வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








