கோல குபு பாரு, அக்டோபர்.19-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோல குபு பாரு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாங் சாக் தாவ், டிவைன் லைஃப் சொசையிட்டி அமைப்பைச் சேர்ந்த குழந்தைகளுக்குப் புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பெற்றோரின் அரவணைப்பு இல்லாத போதும், அந்தச் சிறுவர்கள் தனித்து விடப்படவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பணி அமைந்தது.
அச்சிறுவர்களைக் கடைகளுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய புதுத் துணிகளை வாங்கித் தந்துள்ளார். ஆதரவின்றி இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத் தாம் கொடுக்கும் இந்தச் சிறிய அன்பளிப்பு, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும், பாசத்தையும், சமூகத்தின் இணைந்த உணர்வையும் அளிக்கும் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "அவர்கள் நம்மில் ஒரு பகுதியினர்; அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும்" என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.