திசைகளின் தலையங்கம்
மலேசியாவின் ஆன்மீக அடையாளமான பத்துமலைத் திருத்தலத்தின் நிர்வாகம், இன்று காலாவதியான சட்டங்களுக்கும் நவீன காலத்துத் தேவைகளுக்கும் இடையிலான ஒரு பெரும் விவாதக்களமாக மாறியிருக்கிறது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தை நிர்வகிக்க, சுதந்திரத்திற்கு முந்தைய பழங்கால நடைமுறைகளே அடிப்படை என்று கூறுவது, 2026-ஆம் ஆண்டின் ஜனநாயகச் சூழலுக்குப் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் கெடா மந்திரி புசார் சனூசி நூர், பினாங்கு மாநிலத்தின் மீதான வரலாற்று ரீதியிலான உரிமையைக் கோரிய போது, பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ கொடுத்த பதிலடி மிக முக்கியமானது: "பழங்காலச் சட்டங்கள் எல்லாம் காலாவதியாகி விட்டன. 1957-இல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, மலேசிய அரசியலமைப்புச் சட்டமே இறுதியானது." பினாங்கு விவகாரத்தில் செல்லாத 'பழைய குத்தகை நடைமுறை', தேவஸ்தான விவகாரத்தில் மட்டும் எப்படிச் செல்லுபடியாகும்?
நகரும் மின் படிக்கட்டான எஸ்கலேட்டர் விவகாரத்தில், தனது தந்தை டான் ஶ்ரீ நடராஜாவின் பெயரில் விண்ணப்பம் செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் டத்தோ சிவகுமார், 62 பிரதிநிதிகள் அளித்த ஒப்புதலையே ஆதாரமாகக் காட்டுகிறார். நமது கேள்வி இதுதான்: தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் அந்த 62 பேரும் என்ன இறைவனால் போற்றப்பட்ட 'நாயன்மார்களா'?
அந்த 62 உபயக்காரர்களின் கட்டமைப்பு என்பது மாட்டு வண்டி ஓட்டுநர்கள், சுண்ணாம்பு காளவாய் தொழிலாளர்கள் என 19-ஆம் நூற்றாண்டின் சமூக அமைப்பின் அடிப்படையில் உருவானது. இன்று கோலாலம்பூர் மாநகரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன? தொழிலமைப்புகளே மாறி விட்ட நிலையில், அந்த வாரிசுரிமை மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது ஏன்?
நிர்வாகத் தரப்பின் வாதப்படி பார்த்தால், அந்த 62 குடும்பங்களின் தலைமுறையினர் மட்டுமே பத்துமலைத் திருத்தலத்தை நிர்வகிக்க முடியும்; கல்வித் தகுதியும், நிர்வாகத் திறமையும் கொண்ட மற்ற மலேசிய இந்துக்களுக்கு அங்கே இடமில்லை என்பது போலல்லவா இருக்கிறது? 7 லட்சம் மலேசிய இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒரு பொதுச் சொத்து, ஒரு குறிப்பிட்ட சில குடும்பங்களின் 'குத்தகைச் சொத்தாக' நீடிப்பது எந்த விதத்தில் நியாயம்?
காலமும் சூழலும் மாறி விட்டன. சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு சுட்டிக் காட்டுவது போல, 1957-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே உயரியது.
தேவஸ்தானம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் சுழலாமல், காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள அனைத்து மலேசிய இந்துக்களும் நிர்வாகத்தில் பங்கேற்கும் வகையில் பொதுவில் திறந்து விடப்பட வேண்டும். மாட்டு வண்டிக் காலத்துச் சட்டங்களைப் பிடித்துக் கொண்டு வாரிசு அரசியலை முன்னெடுப்பதை விடுத்து, தற்கால சட்ட விதிகளின்படி வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்குவதே பத்துமலைக்கு நாம் செய்யும் உண்மையான தொண்டு.
குறிப்பாக, உலகெங்கும் வாழும் தமிழர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டு, பக்திப் பெருக்கோடு கொண்டாடும் இந்தத் தைப்பூசத் திருநாளில், பத்துமலைத் திருத்தலம் புதியதொரு விடியலைச் சந்திக்க வேண்டும்.
காலாவதியான சட்டங்களையும், 62 நபர்களின் அதிகார வட்டத்தையும் தாண்டி, இந்தத் தேவஸ்தான நிர்வாகம், ஒட்டு மொத்தப் பொதுமக்களுக்கும் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்பட்டால், அதுவே முருகப் பெருமானுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய காணிக்கையாக அமையும்.
இது மலேசிய இந்துக்கள் ஒவ்வொருவரும் நிர்வாகத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய சகாப்தத்தை நோக்கிப் பத்துமலையை இட்டுச் செல்லவும் வழிவகுக்கும். இந்த மாற்றம் நிகழும்போது, சாமானிய பக்தனும் இந்த நிர்வாகத்தில் தன் குரல் ஒலிக்கிறது என்ற மட்டற்ற மகிழ்ச்சியை அடைவான்.








