ஷா ஆலாம், ஜனவரி.12-
தனது தொகுதி மக்களின் நலனில் அக்கறை காட்டி வரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு நிதி உதவி வழங்கி அவர்களின் சுமையைக் குறைத்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 'மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்' என்ற சிறப்பு நிகழ்வின் மூலம், முறைப்படி பதிவு செய்திருந்த பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கல்விச் செலவினங்களுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய பிரகாஷ் சம்புநாதன், தனது தொகுதி நிதியின் மூலம் வழங்கப்படும் இந்த உதவிக்கு மேலதிகமாக, மடானி அரசாங்கம் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 150 ரிங்கிட் பள்ளிக்கூட ஆயத்த நிதியாக வழங்குவதையும் சுட்டிக் காட்டினார்.
அந்த வகையில் தங்களைப் பதிவு செய்து கொண்ட 120 பெற்றோர்களுக்கு தொகுதி சார்பில் தலா 100 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் விவரித்தார்.

முன்னதாக தமது உரையில் பிள்ளைகளின் கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய அவர், பெற்றோர்களிடம் ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தார். "16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசியின் வழியாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும்," என்று அவர் எச்சரித்தார்.

இந்த நிகழ்வில் கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த குறிப்பாக B40 பிரிவைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.








