கோலாலம்பூர், அக்டோபர்.07-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், அதிக தேவைகள் கொண்ட தொழிற்துறைகளில், மலேசிய இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலும், அவர்கள் தங்களது தொழிற்திறன்களை வளர்த்துக் கொள்ளவும் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியத் திட்டங்களில் ஒன்று தான் மலேசிய இந்திய தொழிற்திறன் பயிற்சித் திட்டமான மிசி. மனிதவள அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் தலைமையிலான குழு, இதற்கான திட்டங்களை வகுத்து இந்தியர்கள் பயனடையும் வகையில் மிசி திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.

கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவுத் திறன்கள் ஆகியவை இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அவசியம் என்பதை உணர்ந்து, இம்முயற்சி இந்தியர்களைப் பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் வலுப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களுக்கு தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி மற்றும் நடைமுறை அறிவை வழங்குவதன் மூலம், அரசு சமத்துவமான வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் மிசி ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் நடைமுறை அடிப்படையிலான கற்றல் முறைகள், பங்கேற்பாளர்களின் வேலை வாய்ப்பு திறன்களை உயர்த்துகின்றன. தொழில்நுட்பத் திறன்கள் முதல் தொழில் முனைவுத் திறன் வளர்ச்சி வரை, மிசி பங்கேற்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கருவிகளைக் கொடுக்கிறது.
தனிநபர் மட்டுமின்றி, சமூகத்தில் தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்ற மனப்பாங்கையும் வளர்க்கும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது. இந்திய சமூகத்தின் திறமைகளை வளர்த்து, அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் தளமாக மிசி திகழ்கிறது.

150 பயிற்சி வகுப்புகள் 8000 இந்தியர்கள் பயன்
கடந்த 2024-ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், கடந்த ஆண்டிற்கான புள்ளி விவரப்படி, நடைபெற்று முடிந்த 150 பயிற்சி வகுப்புகளில் 8000 மலேசிய இந்தியர்கள் பங்கேற்று தாங்கள் கனவு கொண்ட துறைகளில் கால் பதித்துள்ளனர் என்கிறார் மனித வள அமைச்சின் தொழிலாளர் செயல்பாட்டுப் பிரிவின் செயலாளர் டிக்காம் லூர்ட்ஸ்.
மேலும், கடந்த ஆண்டு இத்திட்டத்திற்காக மித்ராவிலிருந்து 10 மில்லியன் ரிங்கிட், மனிதவள மேம்பாட்டு நிதியிலிருந்து (HRDF) 10 மில்லியன் மற்றும் நிதியமைச்சில் இருந்து 10 மில்லியன் என மொத்தம் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் டிக்காம் குறிப்பிட்டார்.
அதே வேளையில், 2025-ம் ஆண்டில் இதுவரையில் வழங்கப்பட்டுள்ள 10 மில்லியன் ரிங்கிட் நிதியில், 6 மில்லியன் ரிங்கிட் டேலண்ட் கார்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார். காரணம், டேலண்ட் கார்ப் 3 மாத வகுப்புகள், 6 மாத வகுப்புகள் என விரிவான அளவில் பயிற்சிகள் நடத்துவதால் அத்தொகை அதற்கு வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். டேலண்ட் கார்ப் மூலமாக இதுவரையில், 68 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 500 பேருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வருவதாகவும் டிக்காம் தெரிவித்தார்.
அத்துடன், பயிற்சியை முடித்தவர்களுக்கு மைக்ரோசாப்ட், மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவனங்களில் உடனடி வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இவ்வாண்டில் இதுவரையில், 38 குறுகிய காலப் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், குறுகிய காலப் பயிற்சி வகுப்புகளுக்காக 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் டிக்காம் தெரிவித்தார்.
பயிற்சியை முடித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு
மிசி தொழிற்திறன் பயிற்சித் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எந்த வகையில் உள்ளன என்ற கேள்விக்குப் பதிலளித்த டிக்காம் தற்போது நடப்பில் அதிக வேலை வாய்ப்புகள் ள் உள்ள துறைகளைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையில், இப்பயிற்சித் திட்டத்தை அமைத்துள்ளதால், பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “முன்னாள் மனிதவள அமைச்சர் மாண்புமிகு சிவக்குமார் மற்றும் தற்போதைய மனிதவள அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் ஆகியோருடன் பயணிக்கையில், திவேக்(Tyvek) தொழிற்சாலைகள் பலவற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதிவேகமாக வளர்ந்து வரும் திவேக் நிறுவனங்கள் பற்றியும், குறை கடத்திகள் (Semi Conductor) நிறுவனங்கள் பற்றியும் மலேசிய இந்தியர்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதை அப்போது அறிந்து கொண்டேன்.
“அதன் அடிப்படையில் தான் மலேசிய இந்தியர்களுக்கு திவேக் பற்றிய விழிப்புணர்வையும், அதற்கான பயிற்சிகளையும் அழிக்க வேண்டுமென்ற நோக்கில், மிசி உருவானது. பின்னர் பெர்கேசோவில் எதிர்கால வேலை வாய்ப்புகளின்் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டதில், நாடெங்கிலும் சுமார் 40,000 வேலை வாய்ப்புகள் திவேக் துறையில் இருப்பதை அறிந்து கொண்டோம். உதாரணமாக, பினாங்கில் உள்ள தொழிற்சாலைகளையெல்லாம் ஆய்வு செய்து, எந்த துறையில் அங்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதை அறிந்து அதற்கு ஏற்ப இந்த பயிற்சித் திட்டத்தை அமைத்தோம்.
“அதே வேளையில், இப்பயிற்சித் திட்டம் குறித்து ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற அலுவலகங்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்களது தொகுதியில் உள்ள இந்தியர்களுக்கு இந்த வாய்ப்பு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்தோம். இதனால் தான் அந்தந்த தொகுதிகளில் வேலையில்லாத இளையோருக்கு சரியான முறையில் இந்தப் பயிற்சித் திட்டம் சென்றடைந்து, அவர்கள் பயிற்சியை முடித்தவுடன் வேலையில் அமரும் வகையில் அமைந்தது.
“தற்போதைய நிலவரப்படி, விமான நிலையங்கள், தகவல் தொடர்பு, உணவு மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பு, மின்னியல் மற்றும் மின்னணுட்டவியல், இணையப் பாதுகாப்பு, ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் உள்ளதால், அதன் அடிப்படையில் எங்களது பயிற்சிகளை அமைத்துள்ளோம்.
“கடந்த ஆண்டு, பயிற்சி பெற்றவர்களில் 300 முதல் 400 பேர் வேலையில் ஏற்கனவே சேர்ந்து விட்டார்கள். சிலர் சுயதொழிலைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு பயிற்சி பெறுபவர்கள் பயிற்சியை நிறைவு செய்தவுடன் அவர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பில் உடனடியாக சேர வேண்டும். அப்படி ஒரு நோக்கத்துடன் தான் இவ்வாண்டு பயிற்சிகளை அளிக்கிறோம். எனவே இவ்வாண்டு குறைந்தது 700 முதல் 800 பேர் இப்பயிற்சித் திட்டம் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
“இவ்வாண்டு அதிகமாக செமி கண்டக்டர் துறையில் பயிற்சி அளிப்பதில் தான் முனைப்பு காட்டுகின்றோம். ஏனென்றால் இத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு மலேசியா மட்டுமல்ல, இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எனவே, இத்திட்டதை நாடெங்கிலும் இன்னும் நிறைய இந்தியர்கள் பயனடையும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கம். ஏனென்றால் இது வெறும் பயிற்சி மட்டுமல்ல, அவர்களை நல்ல வருமானத்துடன் கூடிய வேலையில் அமர்த்தி, வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒன்று. எனவே, மலேசிய இந்தியர்களின் தொழிற்திறனை வளர்த்து அவர்களை அதிக தேவையுள்ள நிபுணத்துவப் பணிகளில் அமர்த்துவதே மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இந்த மிசி தொழிற்திறன் பயிற்சித் திட்டத்தின் ஒரே நோக்கம்” என்று டிக்காம் கூறினார்.
“மிசி என் வாழ்க்கையை மாற்றிவிட்டது”
மிசி பயிற்சித் திட்டத்தில் இணைந்து விமானச் சேவைகளில் பட்டம் பெற்ற திரு. தேவேந்திரன் லோகநாதன், அண்மையில், விமான சேவை அதிகாரியாக வெற்றிகரமாக வேவேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் தேவேந்திரன், அங்கு மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்று வருவதாகத் தெரிவித்தார். அவரது தொடக்க சம்பளம் 2,150 ரிங்கிட் இருக்கும் நிலையில், அவரது தேர்வு முடிந்ததும், அவருக்கு 1,100 ரிங்கிட் கூடுதல் கொடுப்பனவும் கிடைக்கவிருக்கிறது.

“மிசி பயிற்சித் திட்டம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எனது நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தேன். நேர்காணல் வைத்து அதில் நான் தேர்வு ஆனவுடன் தான் பயிற்சியில் இணைத்தார்கள். இப்பயிற்சியில் விமானச் சேவைகள் குறித்து முறையாகப் பயிற்சி பெற்றேன். பயிற்சியை நிறைவு செய்தவுடன் மிசி வழங்கும் சான்றிதழ் மிகவும் மதிப்புமிக்கது. என்னைப் போன்ற இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார் தேவேந்திரன்.
அதே போல், உணவு பதப்படுத்துதல் மற்றும் பொதியிடல் பற்றிய பயிற்சியான ரீடார்ட் தொழில்நுட்பப் பயிற்சியில் (Retort Technology) இணைந்து பயிற்சி பெற்று தற்போது தனது சுய உணவுத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள திருமதி தேவகி மாரிமுத்துவைத் தொடர்பு கொண்டு பேசிய போது, “நான் அடிப்படையாகவே உணவுத் துறையில் ஆர்வமும், அதில் பணியாற்றிய அனுபவமும் கொண்டிருந்தேன். என்றாலும் எனக்கு நீண்ட நாட்களாக சுயமாக உணவுத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. ஆனால் உணவுத் தயாரிப்பில் அதனைப் பதப்படுத்துவதும், முறையாக பேக்கேஜ் செய்வதும் குறித்த தகவல்கள் எனக்குத் தெரியாது. இந்நிலையில் தான் மிசி பயிற்சித் திட்டத்தில் Retort Technology இணைக்கப்பட்டிருந்ததை அறிந்து அப்பயிற்சியில் இணைந்தேன். பயிற்சியின் மூலம் ஓர் உணவை எப்படி பெரிய அளவில் தயாரிப்பது? அதனை எப்படி பாதுகாப்பாக பதப்படுத்துவது? எப்படி அதனை பேக்கேஜ் செய்து கெட்டுப் போகாமல் பாதுகாப்பது? எப்படி உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என பல பயனுள்ள பயிற்சிகளைப் பெற்றேன். அதன் மூலம் எனக்கு இத்துறையில் சுய தொழில் தொடங்க தன்னம்பிக்கை கிடைத்தது. இப்போது நான் ஒரு சுயதொழில் நிறுவனராக மாறியுள்ளேன்” எனப் பெருமையுடன் கூறினார் தேவகி.

அதே போல், புகழ் பெற்ற உள்ளடக்க உருவாக்குநராக (Content Creator) ஆக வேண்டுமென்ற கனவோடு இருந்த கவிநேஷ் முருகனுக்கு அதனை எப்படி முறையாக உருவாக்க வேண்டும்? தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை எப்படி தனது காணொளிகளில் இணைக்க வேண்டுமென்று தெரியாது இருந்த நிலையில், டிக் டாக்கில் வந்த மிசி பற்றிய விளம்பரம் ஒன்றைக் கண்டு அதிலிருந்த தொடர்பு எண்ணுக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை உருவாக்குதல் மற்றும் தொகுத்தலுக்கான பயிற்சித் திட்டத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் பயிற்சியின் இணைந்து தற்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தனது காணொளிகளை உருவாக்கி வருகின்றார் கவினேஷ்.
“செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்துவது, எப்படி காணொளிகளை உருவாக்குவது, அதில் இசையை எப்படிச் சேர்ப்பது? எனது கற்பனைகளுக்கும், திறமைகளுக்கும் ஏற்ப எனது உழைப்பிற்கான ஊதியத்தை எவ்வளவு நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை இப்பயிற்சியில் கற்றுக் கொண்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் கவினேஷ்.

இப்பயிற்சித் திட்டங்களில், குழந்தை பராமரிப்பிற்கான பயிற்சியும் உள்ளது. ஆரம்ப கால குழந்தைப் பராமரிப்புத் திட்டம் என்ற இப்பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற்று தற்போது முழு நேர குழந்தைப் பராமரிப்பாளராக இயங்கி வரும் திருமதி பிரேமலதாவிடம் இது பற்றி கேட்ட போது, “நான் குழந்தைப் பராமரிப்புப் பணிகளை எந்த ஒரு முறையான பயிற்சியும் இன்றி சுய ஈடுபாட்டின் அடிப்படையில் செய்து வந்தேன். ஆனால் எனக்கு இப்பணியை இன்னும் முறையாகக் கற்றுத் தேர்ந்து நிபுணத்துவமாக செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தது. அந்த நேரத்தில் தான், மாண்புமிகு குமரன் அவர்களின் பத்து உபான் அலுவலகத்தில் இருந்து எனக்கு இப்பயிற்சித் திட்டம் குறித்த தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நான் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து தற்போது சான்றிதழ் பெற்ற குழந்தைப் பராமரிப்பாளராக மாறியுள்ளேன். இப்போது எனக்கு இத்துறையில் மிகவும் தன்னம்பிக்கைக் கிடைத்துள்ளதோடு, எனது உழைப்பிற்கேற்ற ஊதியத்தையும் பெறுகிறேன்” என்றார் பிரேமா.

ஆகவே, நாடெங்கிலும், வேலையில்லாத இந்திய இளைய சமுதாயம், தனித்து வாழும் தாய்மார்கள், பெண்கள் மிசியில் சேர்ந்து அரசாங்கம் அளிக்கும் இச்சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். இன்னும் நிறைய மலேசிய இந்தியர்கள் இத்திட்டம் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்ப்பது தான் எங்களது நோக்கம் என்று கூறினார் டிக்காம்.








