கோலாலம்பூர், செப்டம்பர்.12-
மாறி வரும் நவீன இலக்கவியல் யுகத்தில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து தனது கடமையை செய்து வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), பழமையான விசாரணை முறைகளிலேயே தங்கி விடப் போவதில்லை. மாறாக, அதிகரித்து வரும் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை முறைகளிலும் முன்பை விட அதிவேகமாகச் செயல்படவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த சவாலான இலக்கவியல் யுகத்தில், ஊழல் குற்றங்கள் என்பது இருட்டு அறைகளில் இரகசியமாகக் கொடுத்து வாங்குவதன் மூலம் நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக கணினி, விவேகத் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றின் மூலம் ஒரு சொடுக்கில், கிரிப்டோகரன்சி, அந்நிய வங்கிக் கணக்குகள், மெய்நிகர் நிதி ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என எஸ்பிஆர் எம்மின் துணைத் தலைமை ஆணையரும், தற்காலிகத் தகவல் தொடர்பு அதிகாரியுமான டத்தோ ஶ்ரீ அஹ்மாட் குய்ஷைரி யஹாயா தெரிவித்துள்ளார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிம் நிலையில், ஒரு கேள்வி எழுகிறது — ஊழல், அபகரிப்பு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் கருப்புப் பணம் சுத்திகரிப்பு போன்றவற்றைக் கையாள்வதில், எஸ்பிஆர்எம் இன்னும் பாரம்பரிய விசாரணை முறைகளையே முழுமையாக நம்புகிறதா? என்றால் அதற்கு எனது பதில் நிச்சயமாக இல்லை என்பதே.
இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் புதிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போது, அது மனிதர்களுக்கு மாற்றாக வந்துள்ளதா? என்று கேட்டால் அதுவும் இல்லை. மாறாக எஸ்பிஆர்எம் போன்ற அமைப்புகளை மேலும் சுறுசுறுப்பாகவும், முன்னோக்கிச் செயல்படக் கூடியதாகவும், திறமையானதாக ஆக்கும் சக்தியை வழங்குவதற்காக வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊழலின் தடயங்களைக் கண்டறிய ஆயிரக்கணக்கான நிதிக் கோப்புகளையும், இலக்கவியல் பரிவர்த்தனைகளையும் ஒரு விசாரணை அதிகாரி மதிப்பாய்வு செய்ய வேண்டியிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ஆனால் AI யைப் பயன்படுத்துவதன் மூலம், சில நிமிடங்களில் அந்த வேலையை முடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல்: அபாயங்களைக் குறைத்தல், செயல்திறனை அதிகரித்தல்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழல் விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றப் போவதாகவும், குறிப்பாக தரவுகளைக் கையாளும் பணிகளில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு மிகவும் உதவியாக இருக்கப் போவதாகவும் அஹ்மாட் குய்ஷைரி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ஊழல் தடுப்புப் போராட்டத்தில், இலக்கவியல் மயமாக்கல் என்பது மனிதத் தலையீட்டைக் குறைத்து ஊழல், தகவல் கசிவு, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுக்கும் வல்லமை வாய்ந்த கருவியாகக் கருதப்படுகின்றது. ஊழல் குற்ற விசாரணைகளிலும், நிர்வாக மேலாண்மையிலும் எப்போதும் முன்னிலையில் இருக்க, எஸ்பிஆர்எம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் அமைப்புகளைப் பயன்படுத்த விரும்புகிறது.
AI கருவிகளான, OSINT, NLP, Caseware போன்றவை, பிழைகளைத் தானாகக் கண்டறிந்து, தரவைப் பகுப்பாய்வு செய்து, போக்குகள் மற்றும் நடத்தை முறைகளை வெளிப்படுத்துகின்றன. Adobe Acrobat Pro DC, ABBYY FineReader போன்றவை தரவை விரைவாக மாற்ற உதவ, CMS, CRIS, EMS, SPRMFIS, SPRMKPI மற்றும் eSTK போன்ற டிஜிட்டல் அமைப்புகள் புகார் மேலாண்மை, சான்றுகள், விரல் ரேகை மற்றும் அதிகாரிகள் செயல்திறன் கண்காணிப்பை மேம்படுத்துகின்றன என்றும் அஹ்மாட் குய்ஷைரி தெரிவித்துள்ளார்.
டிக்டாக்கில் AI அதிகாரி அறிமுகம்
மற்ற நிறுவனங்களுடன் தகவல் மற்றும் தொடர்பை ஒருங்கிணைக்க, குறிப்பாக ஊழல் அபாயங்களை நிர்வகிப்பதில் அல்லது நிறுவன ஊழல் எதிர்ப்புத் திட்டங்களை உருவாக்குவதில், எஸ்பிஆர்எம், தொடர்புகளை எளிதாக்க OACP அமைப்பு மற்றும் CRM போன்ற அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.
அமைச்சரவை மட்டத்தில் நிர்வாகக் குழு அறிக்கைகளை ஒருங்கிணைக்க தேசிய நிர்வாகக் குழு அறிக்கையிடல் அமைப்பை (eSPJ) ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், பொது நிறுவனங்களில் நேர்மை அலகுகளுக்கான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் கருவியாக ஏஜென்சி நேர்மை மேலாண்மை அமைப்பை (AIMS) பயன்படுத்தியுள்ளது. கூடுதலாக, பென்மாஸ் அறிக்கையிடல் தகவல் மற்றும் தரவுத்தளம் (PRIDE) அமைப்பு தடுப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகள் அல்லது திட்டங்களை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் உதவுகிறது.
அதே வேளையில், பொதுமக்களுக்கு ஊழல் எதிர்ப்புச் செய்திகளை விரிவாகச் செல்லச் செய்வதற்காக, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் SARA (Saya Antirasuah) எனும் அவதார் அதிகாரியை TikTok மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஊடக மேலாண்மையில் AI-யின் பயன்பாட்டுக்காக, SPRM கடந்த ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற 5வது ASEAN PR Excellence Awards விழாவில் சமூக ஊடகங்களை சிறப்பாக தகவல் தொடர்புக்கு பயன்படுத்தியதற்கான பிரிவில் தங்க விருதும், சிறந்த நெருக்கடி மேலாண்மைப் பிரிவில் வைர விருதும், சிறந்த அரசு மக்கள் தொடர்புப் பிரிவில் மற்றொரு தங்க விருதையும் வென்று சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் அஹ்மாட் குய்ஷரி தெரிவித்துள்ளார்.
ஊழலை முன்கூட்டியே கண்டறிவது
Sentinel போன்ற குற்றவியல் நுண்ணறிவு பகுப்பாய்வுத் தளங்கள், விசாரணை நேரத்தை பல ஆண்டுகளிலிருந்து மாதங்களாகக் குறைத்து, தொடர்புடைய தரவுகளில் மட்டும் கவனம் செலுத்த உதவுகின்றன. AI ஆரம்ப எச்சரிக்கை அமைப்பாகச் செயல்பட்டு, ஆடம்பர வாழ்க்கை முறைகள், ஆபத்தான பொதுத் திட்டங்கள், ஊழல் சாத்தியக் கூறுகளை முன்கூட்டியே கண்டறிகிறது. பிளாக்செயின் இணைப்புடன், ஒவ்வொரு பரிவர்த்தனைவும் நிரந்தரமாகப் பதிவுச் செய்யப்பட்டு மாற்ற முடியாததால், பொது கொள்முதல், உள்கட்டமைப்பு செலவுகள், மானிய விநியோகம் போன்ற துறைகளில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதிச் செய்கிறது. இதனால் ஊழலை நிகழ்வதற்கு முன்பே தடுக்க முடியும்.
நவீன ஊழல் குற்றங்கள் கிரிப்டோகரன்சி, மறைமுக தகவல் தொடர்பு, டிஜிட்டல் கோப்புகள் மூலம் நடைபெறுவதால், SPRM தனது தொழில்நுட்ப தடயவியல் பிரிவை (BFT) AI நிபுணத்துவத்துடன் வலுப்படுத்தி ISO 17025 அங்கீகாரம் பெற்றுள்ளது. அதே சமயம், தரவு பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு, கடுமையான தரவு நிர்வாகக் கொள்கைகள், மனித மதிப்பாய்வு, பல அடுக்கு சைபர் பாதுகாப்பு ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய ஊழல் எதிர்ப்பு உத்தியின் (NACS)-ன் கீழ் ஆளுகை, நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு வலுவூட்டல் (MPGIA) போன்ற பயிற்சி தொகுதிகள், அதிகாரிகளின் நேர்மை மற்றும் திறனை மேம்படுத்துகின்றன.
எனவே, ஊழலுக்கு எதிரான போராட்டக் களத்தில், AI மனிதர்களை மாற்றாது; மாறாக, ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு வலுவூட்டும் கருவியாக செயல்பட்டு, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்று அஹ்மாட் குய்ஷரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.