ரவாங், ஜூலை.18-
ரவாங், பண்டார் கண்ண்ட் ஹோம்ஸ், கேர்ஃபீல் காட்டன் இண்டஸ்டிரிஸ் (ம) செண்டிரியான் பெர்ஹாட் தொழிற்சாலை, தீயில் அழிந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலையைக் கேட்டறியவும், அவர்களுக்கான அனுகூலங்கள் குறித்து மதிப்பிடவும், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சார்பாக அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்காம் லுர்ட்ஸ் நேற்று நேரில் வருகைப் புரிந்தார்.

ஆள்பல இலாகாவின் ரவாங் கிளையின் அதிகாரி ஆஸிஸி முன்னிலையில் இந்த வருகை அமைந்திருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சட்ட அம்சங்கள் தொடர்பாக அஸிஸி ஆலோசனை வழங்கினார். இவ்விவகாரம் தொடர்பாக விரிவான ஒரு மதிப்பீடு செய்யப்படும் என்பதையும் அவர் விளக்கினார். உடன், ரவாங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றம் உள்ளூரைச் சேர்ந்த சில தலைவர்களும் இருந்தனர்.

பஞ்சு தயாரிப்பு தொழிற்சாலையான கேர்ஃபீல் காட்டன் இண்டஸ்டிரிஸ், கடந்த ஜுன் 30 ஆம் தேதி நிகழ்ந்த தீச் சம்பவத்திற்குப் பிறகு, 80 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ரவாங்கிலிருந்து சுபாங்கில் உள்ள மாற்று இடத்திற்கு வேலைக்கு அனுப்பப்பட்டனர்.
தொடக்கத்தில் அவர்களுக்கு போக்குவரத்து வழங்கப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. தொழிலாளர்கள் இன்னமும் சுபாங்கிற்குச் சொந்தமாகப் பயணிக்க வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து அலவன்ஸ் தொகை மிகக் குறைவு என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவலன்ஸ் தொகை பயணச் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர் என்று டிக்காம் லுர்ட்ஸ் குறிப்பிட்டார்.
தொழிலாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவாங், ஆள்பல இலாகா இது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

அதே வேளையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எஸ்ஐபி எனும் சிஸ்டம் இன்சுரன்ஸ் பெகெர்ஜாஆன் காப்புறுதி அனுகூலம் மற்றும் ரவாங் பகுதியில் உள்ள இதர தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய வேலை வாய்ப்புக்கான பிற மாற்று ஏற்பாடுகளும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் மூலம் தாங்கள் செய்து வருவதாக டிக்காம் லுர்ட்ஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான அனுகூலம் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் மனித வள அமைச்சு தொடர்ந்து உறுதியாக இருந்து வருவதாக டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.