கோலாலம்பூர், நவம்பர்.10-
இந்தியர்களின் சமூகவில் உருமாற்றும் பிரிவான மித்ராவின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் கொண்டு வந்த மாற்றங்கள், இந்திய சமுதாயத்திற்கு மிகப் பெரிய ஏற்றத்தைத் தந்தது என்கிறார் டத்தோ ஶ்ரீ ரமணனின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன்.
மித்ரா கடந்த காலங்களில் மிகப் பெரியப் பிரச்னைகளை எதிர்நோக்கி வந்தது. குறிப்பாக, மித்ரா இந்திய சமுதாயத்தின் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மித்ராவின் கணக்கு வழக்குகள் முதன்மை பிரச்னையாகத் தலைத் தூக்கியது.
மித்ராவில் உள்ள பிரச்னைகளைக் களைவதற்கு மடானி அரசாங்கத்திற்கு தலைமையேற்ற பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிரடி முடிவை எடுத்தார். மித்ரா மறு சீரமைக்கப்பட வேண்டும். இந்திய சமுதாயத்திற்கு புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பாகும்.
அந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு 2023 ஆம் ஆண்டு மித்ராவின் செயற்குழுத் தலைவராக சுங்கை பூலோ எம்.பி.யான டத்தோ ஶ்ரீ ரமணனை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் நியமித்தார்.
2023 ஆம் ஆண்டு மித்ராவின் தலைவராகப் பொறுப்பேற்ற போது, அதற்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டையும் முழுமையாகச் சமுதாயத்திற்கு செலவிட்ட வரலாற்றுக் குறிப்பையும் டத்தோ ஶ்ரீ ரமணன் கொண்டுள்ளார் என்று டத்தோ அன்புமணி குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கல்வித் திட்டங்களில் அவர் காட்டிய அக்கறையும், முன்னெடுப்பும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இந்திய மாணவர்கள் குறிப்பாக உயர்க்கல்விக்கூடங்களுக்குச் செல்கின்ற மாணவர்களுக்கு ஆயத்த கல்வி நிதியாக தலா 2 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கினார்.
இதுவரையில் யாருமே இப்படியொரு திட்டத்தை முன்னெடுத்தது இல்லை. இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெற்றனர். இதற்காக 20 மில்லியன் ரிங்கிட்டை டத்தோ ஶ்ரீ ரமணன் ஒதுக்கினார் என்று டத்தோ அன்புமணி விவரித்தார்.
இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த பாலர் பள்ளி மாணவர்கள், வெறும் வயிற்றுடன் கல்வி கற்கக்கூடாது என்ற நோக்கில் டத்தோ ஶ்ரீ ரமணன் இந்தச் சிற்றுண்டித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
டத்தோ ஶ்ரீ ரமணன் எடுத்த இந்த முடிவு, பெற்றோர்கள் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் மத்தியிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
டத்தோ ஶ்ரீ ரமணன் மித்ராவில் தலைவராக இருந்த காலக் கட்டத்தில் அவர் நிகழ்த்திய மிகப் பெரிய சாதனைகளில் இந்தத் திட்டங்கள் முதல் படியாகும் என்று டத்தோ அன்புமணி குறிப்பிட்டார்.








