ஒரு மீனவ கிராமமாக உருவாகி, நாட்டின் தலைச்சிறந்த சுற்றலாத் தலமாக விளங்கி வரும் பங்கோர் தீவு, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் திகதி முதல் Duty-Free எனும் தீர்வையற்ற தீவாக அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. லங்காவி தீவைப் போல பங்கோர் தீவும் உள்ளூர் சுற்றுப்பயணிகள் மட்டுமின்றி பன்னாட்டு சுற்றுப்பயணிகளையும் கவரும் பொருட்டு அத்தீவுக்கு வரி விலக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த வரி விலக்குக் கொண்ட தீவின் இன்றைய நிலை என்ன? ஆராய்கிறது திசைகள்.

தீர்வையற்ற ஒரு தீவில் முக்கிய அம்சமாக 'சாக்லேட்' போன்ற உணவுப்பொருள்கள், வெண்சுருட்டு (சிகரெட்), மதுபானம் ஆகியவை வரியில்லாத நிலையில் மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதாகும்.
பங்கோர் தீவு 2020இல் தீர்வையற்ற தீவாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, மதுபானம் மற்றும் 'சிகரெட்' வகைகள் மட்டுமே ஒரு வாரத்திற்கு வரி விலக்கு பொருள்களாக விற்பனை செய்யப்பட்டன.
அதற்குள் பங்கோர் தீவில் வசிக்கும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் இணைந்து மதுபானம் விற்பனைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்ததைத் தொடர்ந்து, மதுபானம் விற்பனைக்கான வரி விலக்கு முறை மீட்டுக்கொள்ளப்பட்டது. தற்போது 'சாக்லேட்', வாசனைத் திரவியங்கள், 'பிங்கான்' தட்டுகள், 'பாதேக்' துணிகள் போன்றவற்றுக்கு மட்டுமே வரி விலக்கு வழங்கப்படுகிறது.
சீனர்களைப் பொருத்தவரை மதுபானம் விற்பனையை ஆதரித்தனர். ஒரு சுற்றுலாத் தலத்திற்கு மதுபானம் விற்பனை அவசியம் என்று கருதிய அவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆனால், பங்கோர் தீவில் தீர்வையற்ற அடிப்படையில் மதுபானம் விற்பனை என்பது மிக ஆபத்தானதாகும் என்று உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். காரணம் பங்கோர் தீவை லங்காவியுடன் ஒப்பிட முடியாது. இது நிலப்பரப்பளவில் மிகச் சிறிய தீவாகும். 30 நிமிடத்திற்குள் பங்கோர் தீவைச் சுற்றி வந்துவிடலாம். நிலமை இவ்வாறு இருக்க மதுபானம் விற்பனையை அனுமதித்தால் அதிகமான விபத்துகள் நிகழ்வதற்கு வழிவகுக்கலாம் என்கிறார் உணவக உரிமையாளர் ஷரண் (34 வயது).
பங்கோர் தீவைப் பொருத்தவரை மோட்டார் சைக்கிளோட்டிகள் யாருமே தலைக்கவசம் அணிவதில்லை. சுற்றுப்பயணிகள் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுக்கும்போது தலைக்கவசம் அணியும்படி ஊக்குவித்தாலும்கூட அதனைச் சுற்றுப்பயணிகள் பொருட்படுத்துவதில்லை. இதில் மதுபானம் விற்பனைக்குரிய தலமாகப் பங்கோர் தீவு விளங்கினால் நிலமை எவ்வாறு இருக்கும் என்று ஷரண் கேள்வி எழுப்புகிறார்.
மதுபானம் விற்பனை போன்றவற்றை ஊக்குவிப்பதைவிட சுற்றுப்பயணிகளைக் கவர்வதற்கு 'தீம் பார்க்' போன்ற சிறார் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் நீர்நிலை விளையாட்டுத் தலங்களை அறிமுகப்படுத்தலாம் என்று ஷரண் பரிந்துரைத்தார்.
உள்ளூர்வாசிகள் வாகனத்திற்கான உபரிப்பாகங்களை வாங்குவதற்குக்கூட பங்கோரிலிருந்து படகு (ஃபெரி) மூலம் லுமூட் அல்லது மஞ்சோங்கிற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இன்னுமும் இருக்கிறது.
சுற்றுப்பயணிகளுக்கான வசதிகளைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கும் அரசாங்கம் முதலில் உள்ளூர்வாசிகளின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஷரண் கேட்டுக் கொண்டார்.
தீர்வையற்ற என்பதை விட உள்ளூர்வாசிகளின் ஃபெரி சேவை மிக முக்கியம். ஆபத்து அவரச வேளைகளில் பங்கோர் வாசிகள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமானால் ஃபெரியை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
தற்போது ஃபெரி சேவை ஒவ்வொரு நாளும் லுமூட்டிலிருந்து பங்கோருக்கு மாலை 6.30 மணிக்கும், பங்கோரிலிருந்து லுமூட்டிற்கு மாலை 6.45 மணிக்கும் முடிவடைகிறது. அதன் பின்னர் ஃபெரி சேவை இல்லை. அதற்குப் பிறகு தங்களுக்கு ஆபத்து அவசர தேவைகள் இருந்தால் கடலை எவ்வாறு கடப்பது? என்று வினவுகிறார் 75 வயது எல்லம்மாள்.
ஆகக் கடைசியாகக் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பங்கோர் பத்திரகாளி அம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவிற்கு வெளியூரிலிருந்து இரவில் வந்தவர்கள் ஃபெரி சேவை இல்லாததால் மீன் பிடிப்பு படகில் பயணித்தனர். அந்தப் பயணத்தில் விபத்து நேர்ந்து மூன்று இந்தியப் பெண்கள் உயிரிழந்ததாக எல்லம்மாள் நினைவுக்கூருகிறார்.
தீர்வையற்ற பங்கோருக்கு வழங்கப்படும்போது இத்தீவில் உள்ள 100 வாடகை வண்டி ஓட்டுனர்களுக்குப் புதிய வாடகை வண்டிகளைச் சலுகை விலையில் வழங்கப்படும் என்று பங்கோர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்நாள் வெளியுறவு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதீர் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்காக மாதிரி வாடகை வண்டி ஒன்றை வழங்கினார். இது 100 வாடகை வண்டி ஓட்டுனர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் என்று ஒரு மாதக் காலத்திற்கு ஓட்டி பரிசோதிக்க கொடுக்கப்பட்டது. நாங்களும் மனம் குளிர்ந்தோம். வரி விலக்கு பங்கோருக்கு எப்போது கிடைக்கும் என்று ஆவலாகக் காத்திருந்தோம். ஆனால், மிஞ்சியதோ ஏமாற்றமே. வரி விலக்கு வந்தது. ஆனால், அந்த வாடகை வண்டிகள் வரவில்லை என்று பங்கோர் தீவில் பல ஆண்டுகளாக வாடகை வண்டி ஓட்டுனராக இருந்து வரும் பார்திபன் (47 வயது) தெரிவித்தார்.
பங்கோர் தீவில் வரி விலக்கு இல்லாதபோதே வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் பெட்டிப் பெட்டியாக மதுபானப் புட்டிகளைத் தூக்கி வருவார்கள். இந்த வரி விலக்குக்குப் பிறகு மதுபானம் அனுமதிக்கப்பட்டிருந்தால் பலர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். ஏற்கெனவே பலர் மதுபானத்தால் உள்ளூர் மக்களுடன் தகராறில் ஈடுபட்ட கசப்பான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. மதுபானம் இல்லாதது, அதுவே நல்லதாகும் என்கிறார் மற்றொரு வாடகை வண்டி ஓட்டுநர் பூசராஜன் ( 61 வயது).
பங்கோர் தீவிற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது மூலம் அதிகமான சுற்றுப்பயணிகளைக் கவர்ந்திழுக்க முடிகிறது என்றார் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வரும் ராஜேந்திரன் முனியாண்டி (45 வயது).
இதனால் தங்குவிடுதிகளில் அதிகமான அறைகள் முன்னுறுதி செய்யப்பட்டு சுற்றுப்பயணிகளும் அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக, வரி விலக்குக்குப் பிறகு, பங்கோர் தீவில் சகல வசதிகளும் உண்டு என்ற எதிர்ப்பார்ப்பில் வருகின்றவர்கள்தான் அதிகமாக உள்ளனர். திரும்பும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால், வரும்போது உற்சாகத்துடன்தான் வருகிறார்கள் என்று ராஜேந்திரன் விவரித்தார்.
திசைகளின் சிறப்பு பேட்டி
நிருபர் : மாலதி சண்முகம்
