ரவாங், ஆகஸ்ட்.26-
மலேசிய அடிமுறை சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக சிலம்பக் கலைப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரவாங், அங்கூன் சிட்டியில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டி விழாவில் சிறப்பு பிரமுகராக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றிய பிரகாஷ், சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மா 2026 இல், சிலம்பப் போட்டி நிலை நிறுத்தப்பட்டிருப்பது குறித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை 2026 சுக்மா போட்டியில் நிலை நிறுத்துவதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும், குறிப்பாக மடானி அரசாங்கத்துடன் இணைந்து இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய சிலாங்கூர் அரசு மற்றும் மாநில பிரதிநிதிகள் அனைவருக்கும் பிரகாஷ் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன் சிலாங்கூரின் 2026 ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் சிலம்பப் போட்டிக்குத் தாம் புரவலராக நியமிக்கப்பட்டு இருப்பதையும், சிலம்பப் பொறுப்பாளர்களுடன் பிரகாஷ் தமது உரையில் பகிர்ந்து கொண்டார்.

இதன் தொடர்பில் சிலாங்கூர் மட்டுமின்றி, மலேசியா முழுவதும் சிலம்பக் கலையை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக பிரகாஷ் உறுதித் தெரிவித்தார்.
